Friday, May 22, 2015
புற்றுநோய் ஏன் வருகிறது சித்த மருத்துவத்தில் இதற்கு தீர்வு உள்ளதா அகத்தியபெருமான் அருள்வாக்கு
இறைவனின் அருளால் இது குறித்தும் பலமுறை கூறியிருக்கிறோம். பாவத்தின் தன்மை இதுதான். இதனால்தான் இந்த நோய் வருகிறது, இந்த துன்பம் வருகிறது என்று கூற இயலாது. ஒட்டுமொத்த பாவங்களின் விளைவுதான் கடுமையான நோய், கடுமையான பிணி. இருந்தாலும் பிறவிதோறும் புற்று, மனிதன் மீது பற்று வைக்கிறது என்றால் அந்த அளவிற்கு அவன் பாவம் தொடர்கிறது என்பது பொருளாகும். புற்று மட்டுமல்ல. எல்லாவகையான நோய்களுக்கும் மனிதரீதியான காரணங்கள் வேறு, மகான்கள் ரீதியான காரணங்கள் வேறு. வெளிப்படையாக ஒரு கிருமியால் அல்லது வெள்ளை அணுக்கள் அளவிற்கு அதிகமாக உற்பத்தியாவதால் இந்த நோய் வருவதாகக் கூறினாலும்கூட இஃதொப்ப பல்வேறு பிறவிகள் பிறந்து, பல்வேறு மனிதர்களின் குடும்பத்தை நிர்கதியாக்கி, நிர்மூலமாக்கி, பல குடும்பங்களை வாழவிடாமல் அவர்களை மிகவும் இடர்படுத்தி, பல மனிதர்களின் வயிற்றெரிச்சலை யார் ஒருவன் வாங்கிக்கொள்கிறானோ அவனுக்கு புற்று பிறவிதோறும் பற்று வைக்கும்.
இதற்கு மட்டுமல்ல, எல்லா பிணிகளுக்கும் மருந்து இருக்கிறதப்பா, கொல்லி மலையிலும், சதுரகிரி மலையிலும். ஆனால் புண்ணியமும், இறைவன் அருளும் இருப்பவனுக்கு மட்டும்தான் அந்த மருந்து கிடைக்கும். அந்த மருந்து கிடைத்தாலும் அவனுக்கு நல்லதொரு வேலையை செய்யும். இருந்தாலும்கூட பிரார்த்தனை எந்தளவிற்கு ஒரு மனிதன் மனம் நெகிழ்ந்து செய்கிறானோ அந்தளவிற்கு நலம் நடக்கும்.
திமிரி பாஷாண ஐயனை முழுமதி தினம் சென்று வணங்கி அந்த தீர்த்தத்தை உண்மையான அன்போடு சிறிதளவு பருகுவதும், பழனி முருகன் திருமேனி சந்தனத்தை சிறிதளவு பருகுவதும், தூய்மையான, கலப்பில்லாத வெள்ளி உலோகத்தால் செய்யப்பட்ட ஒரு சிறிய பாத்திரத்தில் நல்விதமான சிறியாநங்கை எனப்படும் மூலிகை சாற்றை அதிகாலை வெறும் வயிற்றிலே ஏற்பதும் இதற்கு தக்க வழியாகும். ஆனாலும்கூட உணவு முறையிலே தேங்காய் எனப்படும் உணவை தொடர்ந்து, அதனை அனலில் வாட்டாமல் அப்படியே உண்டு வருவதும், அஃதோடு வெள்ளையோரின் காய்கறியான செந்நிறத்திலே இருக்கக்கூடிய அஃதொப்ப செந்நிற நீர் காயை அதிகம் ஏற்பதும், அதன் சாறை பருகுவதும், எம் நாமத்தில் உள்ள கீரையை ஏற்பதும் இதற்கு தக்க மாற்றாக இருக்கும். வருமுன் காக்கலாம். வந்த பிறகு இதற்கு தீர்வு என்பது இறைவன் கையில்தான் இருக்கிறது. பாதிக்கப்பட்ட மனிதன் இறைவனிடம் மன்றாடி அந்தத் தீர்வை பெற்றுக்கொள்வதுதான் எளிய வழியாகும்.
--