Wednesday, May 20, 2015

அகத்தியபெருமான் அருள்வாக்கு






இறைவன் அருளால் ஸ்ரீ  ராமபிரானுக்கு அபிஷேகம் நடந்தது. யாராவது வந்தார்களா ? எஃதாவது அங்கு அதிசயம் நடந்ததா ? இஃது குறித்து குருநாதர் எஃதும் கூறவில்லையே ? இஃது குறித்து எஃதாவது கூறினால் நன்றாக இருக்குமே ? ஆஞ்சநேயர் வந்தாரா ? கருடாழ்வார் வந்தாரா ? சிறிய திருவடியா ? பெரிய திருவடியா ? அல்லது இராமபிரானே வந்து அந்த அபிஷேகத்தை ஏற்றுக்கொண்டாரா ? இவை எல்லாம் நியாயமான வினாக்களாக இருந்தாலும் இது போன்ற வினாக்களுக்கு அதிலும் இத்தருணம் யாங்கள் எஃதும் கூற விரும்பவில்லை. இனி அவரவர்களே இது போன்ற இறைவழிபாட்டில் புரிந்து கொள்ளும் வண்ணம், நிகழ்ச்சி நடக்கும் வண்ணம் அவரவர்களும் தன் மனதை லயப்படுத்தி பூஜை செய்தால் பலன் உண்டு, அந்த பலனை அங்கேயே உணரக்கூடிய ஒரு தன்மைக்கு அனைவரும் ஆட்பட வேண்டும் என்று நாங்கள் மௌனம் காக்கிறோம்.



குருநாதா ! முளைப்பாரிகை பூஜையின் தாத்பரியம் என்ன ?



இறைவனின் கருணையைக் கொண்டு எத்தனையோ மரபுகள் வழக்கொழிந்து போயிருக்கின்றன, எத்தனையோ பூஜைகள் வழக்கொழிந்து போயிருக்கின்றன. இஃதொப்ப பாவனா பக்தி மார்க்கத்தில் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. தத்துவார்த்த பக்திக்கும், பாவனா பக்திக்கும் வெகுதூரம். அதே சமயம் ஞானியர் நிலைக்கும், பக்தநிலைக்கும் என்றுமே வெகுதூரம். சித்த நிலைக்கும், பக்த நிலைக்கும் வெகுதூரம். இருந்தாலும் சித்தனாக இருந்தாலும் ஒரு பக்தனை அல்லது பக்திவழியை ஏன் ஆதரிக்கிறோம் ? என்றால் எஃதாவது ஒரு வழிமுறையை பிடித்துக்கொண்டு அவன் இறையை நோக்கி செல்ல வேண்டும் என்றுதான். எனவே குழந்தை நடக்க வேண்டும் என்பதே தாய்க்கும், தந்தைக்கும் விருப்பம். அதற்குதான் நடைப்பழக ஒரு வண்டி, நடைவண்டி. ஆனால் கடைவரையிலும் ஒரு குழந்தை நடைவண்டியை பிடித்துகொண்டு நடந்தால் தாய், தந்தை அதை ஆதரிக்க மாட்டார்கள். எனவே பக்தியில் இருக்கக்கூடிய அத்தனை மரபுகளும் ஏற்புடையதே ஒரு குழந்தையின் நடைவண்டி போல. ஒரு நிலை தாண்டத் தாண்ட அந்த மரபுகளெல்லாம் அடுத்த குழந்தைகளுக்கு பொருந்தும் என்று கூறிவிட்டு இந்தக் குழந்தை வளரவேண்டும்.



சிறுகுழந்தையாக இருக்கும்பொழுது அக்ஷரம், அக்ஷரமாகக் கூட்டி வாசிக்கும்பொழுது ‘ ஆஹா ! என் குழந்தை நன்றாக கல்வி கற்கிறான் ‘ என்று அனைவரும் பெருமிதம் கொள்வார்கள். இருபது வருடம் கடந்த பிறகு ‘ எங்கே நீ என்ன கற்றிருக்கிறாய், கூறு ? ‘ எனும்பொழுது முன்புபோலவே அக்ஷரம், அக்ஷரமாக எழுத்தைக்கூட்டி வாசித்தால் யாரும் பாராட்ட மாட்டார்கள். எனவே பக்தி வழியில் சம்பிரதாயங்கள் அனைத்தும் ஏற்புடையதே, உயர்ந்ததே. ஆனாலும் அஃதே இறைவனிடம் கடைவரையிலும் அழைத்து செல்லாது. அஃதொப்ப புத்தி வளர, வளர எப்படி உலகியல் முறைகளெல்லாம் மாறிக்கொண்டு வருகிறதோ பக்தியில் மேலே ஏற, ஏற பல்வேறு மரபுகளைத் தாண்டி ஒரு மனிதன் அமைதியாக அமர்ந்து உள்ளத்திற்குள் இறைவனை தேடுகின்ற நிலைக்கு வந்துவிட வேண்டும். இருந்தபோதிலும் இஃதொப்ப சேயவள் கேட்டிட்ட அஃதொப்ப வழிபாடெல்லாம் ஒரு வளர்ச்சியை…… இஃதொப்ப நன்றாக கவனிக்க வேண்டும். இப்பொழுதுகூட திருமண சடங்குகளில் இஃது பயன்பட்டு வருகிறது. இஃதொப்ப அடுத்தடுத்து வாழையடி வாழையாக ஒரு வளர்ச்சி வேண்டும் என்று மனதிலே வளர்த்துக்கொண்டு முற்காலத்தில் இதுபோன்ற பழக்க, வழக்கங்களை ஏற்படுத்தினார்கள். இன்னும் இஃதை தாண்டி இன்னும் பல்வேறுவிதமான மங்கலம் என்கிற பொருள்பட பல்வேறு பழக்க, வழக்கங்கள் ஆலயங்களில் ஏற்படுத்தப்பட்டது. அனைத்துமே சுபத்தை சுட்டிக்காட்டுவதாக, இனியாவது வாழ்க்கை சுபமாக இருக்கவேண்டும் என்பதற்காகவும், பாவங்கள் ஒரு மனிதனை எந்தளவிற்கு வாட்டினாலும் இனி இஃதொப்ப வழிபாட்டிற்குப் பிறகு அந்த குறிப்பிட்ட பாவம் அவனை விட்டு விலகவேண்டும் என்பதற்காகவும், எல்லாவற்றையும் தாண்டி கடும் களத்திர தோஷம் நீங்க வேண்டியும் இஃதொப்ப வழிபாட்டு முறை முற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. இதைத் தாண்டி இன்னவளுக்கு போதிக்கப்பட்ட விஷயமும் அதில் அடங்கும்.



பத்திரம் என்ற சொல்லுக்கு எத்தனை பொருள் இருக்கிறது ?  கவனம் என்ற சொல்லும் வருகிறது. அதி முக்கியம் என்ற சொல்லும் வருகிறது. ஆஸ்தி குறித்து ஒரு சாசனம் எழுதி வைத்தால் அதற்கும் இந்த பெயர் வருகிறது. அஃதொப்ப இறைவனுக்கு சாற்றுகின்ற வில்வத்திற்கு பின்னால் இந்த சொல் பொருந்தி வருகிறது. இன்று சாள    ( க்ராம ) மூர்த்தி திருவடியை வணங்கினீர்களே ? அஃதொப்ப அந்த இராமருக்கு பிரியமான பக்தன் இராமதாசன் என்ன செய்தான் ? அஃதொப்ப அந்த பத்ராசலத்திலே இராமருக்கு அற்புதமான ஆலயம் ஒன்றை எழுப்பியிருக்கிறான் கோதாவரி நதிக்கரையிலே. இவற்றை சரியாக சொல் ஆய்ந்து பார்த்தால் மிக அதிமுக்கியம் என்ற சொல்லானது வருகிறது. ஆனால் தெய்வ சாந்நித்தியம் என்று வரும்பொழுது அஃதொப்ப அதி, அதி, அதி, அதி கூர்மையான, அதி, அதி தேவையான என்ற பொருள் வருகிறது. இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்பொழுது அது தெய்வத்தை சார்ந்த, தெய்வத்தை தொழ, தெய்வ அருளைப் பெற, உதவியாக, தேவையாக இருக்கக்கூடிய ஒரு சூழலை தருவதால் இன்னவள் கூறிய அஃதொப்ப விஷயம் அந்தப் பொருள்படும்படி அதற்கு சூட்டப்பட்டிருக்கிறது. இருந்தாலும் இந்த தத்துவார்த்த விளக்கத்தை சார்ந்து இஃதொப்ப கூறும்பொழுது இதுபோன்ற நல்லவிதமான விஷயங்கள் எல்லாம் பொதுவாக எதற்காக தெய்வத்தோடு இணைக்கப்பட்டது ? என்றால் ஒரு மனிதன் சராசரி நிலையிலிருந்து எடுத்த எடுப்பிலேயே தத்துவார்த்தமாக தெய்வத்தை புரிந்துகொள்ள முடியாது என்பதற்காகத்தான் ஸ்தல விருக்ஷமோ, நதி தொடர்பான விஷயமோ, மற்ற விஷயங்களோ ஏற்படுத்தப்பட்டது. இவைகளையும் தாண்டி பக்தியில் எத்தனையோ விஷயங்கள் வழக்கொழிந்து இருக்கின்றன. அவையெல்லாம் கால ஓட்டத்தில் மெல்ல, மெல்ல மேலே வரும்.



அஃதொப்ப பல்வேறு நுணுக்கமான விஷயங்கள் எல்லாம் சில ஜாதக நிலைக்கு ஏற்புடையதாக இருக்கும். பல ஜாதக நிலைக்கு அமையாமல் விதி தடுத்துவிடும்.



இறைவனின் கருணையைக்கொண்டு, இருக்கின்ற பரம்பொருள் ஒன்று, வடிவங்கள் வேறு. அந்த வடிவங்களில் ஆண் தன்மை, பெண் தன்மை என்று இரு பகுதியாக பிரிக்கப்பட்டிருக்கிறது. எப்பொழுதுமே ஒரே ஒரு சக்தி, அது எந்த ஆற்றலாக இருந்தாலும் அந்த ஆற்றலில் கட்டாயம் இருதுருவங்கள் இருக்கத்தான் செய்யும். அது இயல்பு. அஃதொப்ப ஒரே சக்தியின் இரு நேர் வடிவங்கள்தான் ஆண் சக்தி, பெண் சக்தி. ஆண், பெண்ணைத் தாண்டியதுதான் பரம்பொருள் என்பது உண்மையான தத்துவார்த்த விளக்கம். இதனையும் தாண்டி சிறு, சிறு வடிவங்கள்கூட பரம்பொருளுக்கு சூட்டப்பட்டு விட்டது. இன்னொன்று இருக்கிறது. நன்றாக வாழ்ந்து, பாவங்களையே சேர்க்காமல், பாவங்களையெல்லாம் அனுபவித்து, பரிகாரம் செய்து, பல புண்ணிய காரியங்கள் செய்து, முழுக்க, முழுக்க புண்ணிய ஆத்மாவாக ஒரு பிறவியை அல்லது எத்தனையோ பிறவிகள் எடுத்து முடித்துக்கொண்ட ஆத்மாக்கள் எல்லாம், பதவி உயர்வு என்று மனிதனால் கொடுக்கப்படுவதுபோல, இறைவனால் சிறு, சிறு தேவதை வர்க்கங்களாகவும் அல்லது காவல் தெய்வங்களாகவும் பதவி உயர்வு தரப்படுகிறது. அப்படியெல்லாம்கூட பல தெய்வ வழிபாடுகள் தோன்றியிருக்கின்றன. இவைகள் ஒருபுறம்.

அதே சமயம் பைரவர் மூர்த்தங்களை 64 என்று மனிதர்கள் கருதுகிறார்கள். அல்ல, 108 பைரவ மூர்த்தங்கள், அதற்கு மேலும் உண்டு. இதில் மனித லோகத்திற்கு என்று சில பைரவ வழிபாடுகள் கூறப்பட்டிருக்கின்றன. பாதாளலோக பைரவ வழிபாடு என்று இருக்கிறது. அதே சமயம் பல்வேறு மலினங்களையும், தவறுகளையும் செய்தாலும் மனித பக்தியில் மட்டும் எங்காவது, எள்ளளவு, கடுகளவு பக்தியிருந்தால் இறைவன் ஏற்றுக்கொண்டு விடுகிறார். ஆனால் பாதாள லோகம், மேலுலகம், தேவர் உலகம், யக்ஷ உலகம், அசுர உலகத்தில் எல்லாம் கடுகளவு பிழை என்றாலும் இறைவன் அதனை ஏற்றுக்கொள்வதில்லை. இதனால்தான் எப்பொழுதுமே இறைவனுக்கு மனிதர்கள், செல்லப்பிள்ளைகள் என்கிற கோபம் அனைத்து ( மேல் உலக ) வர்க்கத்தினரிடமும் இருக்கிறது. அதனால்தான் சிறு, சிறு தேவர்கள்கூட பல்வேறு தருணங்களில் ‘ இத்தனை தவறுகள் செய்யும் மனிதர்களுக்கு ஏன் இறைவன், இத்தனை சலுகைகள் காட்டுகிறார் ? ‘ என்றெல்லாம்கூட இறைவனைப் பார்க்கும்பொழுது எதிர்வாதம் செய்கிறார்கள். இஃது ஒருபுறம் இருக்கட்டும்.



அதைப்போல விநாயக மூர்த்தங்கள் என்று எடுத்துக்கொண்டால் அதையும் 108 என்று வகை, வகையாகப் பிரிக்கலாம். இதை அறிவுபூர்வமாக எப்படி புரிந்துகொள்வது ? ஒரு மனிதன் இருக்கிறான். ஒரு அலுவலகத்தில் குறிப்பிட்ட பணி அவனுக்கு தரப்படுகிறது. இன்ன பதவி என்று நாமம் இடப்பட்டு அவனுக்கென்று ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது. பிறகு வேறு சில காரணங்களுக்காக அதைத் தாண்டி அந்தப் பணி இருக்க, வேறொரு வேலை கொடுக்கப்படுகிறது. அப்பொழுது அதே மனிதன் வேறு சில வேலைகளை செய்யவேண்டியிருக்கிறது. அப்பொழுது அவனுக்கு வேறொரு நாமம் கொடுக்கப்படுகிறது. பிறகு இன்னும் சில காலங்கள் கழித்து வேறு ஒரு பணி கொடுக்கப்படுகிறது. இப்பொழுது அவன் முதலில் செய்த பணிதொடர்பாக ஒருவன் வந்தால் ‘ நீ கூறுவது உண்மைதானப்பா. அந்தப் பணியும் எனக்குதான். ஆனால் அதைத்தாண்டி இப்பொழுது வேறு சில பணிகள் வந்துவிட்டதால் அதை செய்ய வேண்டியிருக்கிறது. எனவே எனக்கு பதிலாக அந்த இடத்தில் வேறு ஒருவனை நிறுவனம் அமர்த்தியிருக்கிறது. அவனை சென்று பார் ‘ என்று கூறுவானே, அதைப்போல அதே பரம்பொருள், ஒரு மனிதன் என்ன வேண்டும் ? எதற்கு இறைவனை நாடவேண்டும் ? என்ன விஷயமாக நாடவேண்டும் ? என்றெல்லாம் தோன்றும்பொழுது, சராசரி பக்தி நிலையிலே ‘ கல்வி வேண்டுமென்றால் அந்தப் பரம்பொருளை நீ கலைவாணியாக பாரப்பா. கல்வியோடு ஞானம் வேண்டுமென்றால் ஹயக்ரீவராக பாரப்பா. இல்லை, எனக்கு பொருள் வேண்டுமென்றால் அந்த பரம்பொருளை, லக்ஷ்மியாக பாரப்பா ‘ என்று புரிவதற்காக குறிக்கப்பட்டது. அதிலும் உப விஷயங்களாக சில வழிபாடுகள் கால ஓட்டத்தில் மகான்களாலும், மனிதர்களாலும் வகுக்கப்பட்டது. இப்படி பிரித்து, பிரித்து பரம்பொருளை வணங்கினாலும் அல்லது எஃதாவது ஒரு வடிவத்திற்குள் வணங்கினாலும் அல்லது வடிவமே இல்லாத பேராற்றலாக எண்ணி வணங்கினாலும் வழிபாடு என்பது முக்கியம். மனதிலே சுத்தத் தன்மை, எந்தவிதமான எதிர்பார்ப்பு இல்லாத பக்தி முக்கியம். அந்த வகையில் நீ கூறியதை தாண்டியும் அன்னை கலைவாணிக்கு வடிவங்கள் உண்டு. வடிவம் எடுக்கவேண்டும் என்று பரம்பொருள் எண்ணிவிட்ட பிறகு அது எப்படி எண்ணிக்கைக்குள் அடங்கும் ?  64 தான் என்று ஒரு மனிதன் கூறினால், ‘ ஏன், 108 – ஆக தாயே நீ வடிவம் எடுக்கக்கூடாதா ? ‘ என்று ஒரு பக்தன் கேட்பான். இன்னொரு பக்தன் ‘ 1008 – ஆக எடுக்கக்கூடாதா ? ‘ என்று கேட்பான். எனவே அது, இத்தனை என்ற எண்ணிக்கைக்குள் அடங்காத வடிவம். எனவே எப்படி நீ வழிபட்டாலும், அது வழிபடும் மனிதனின் கர்மவினையை பொறுத்து பரம்பொருளின் அனுக்ரஹம் இருக்கும். அதே தருணம் 64 தான் என்று முடிவெடுத்து அதற்குள் வழிபாட்டினை சுருக்கிக் கொண்டாலும் தவறொன்றுமில்லை. இருந்தாலும் ஒட்டுமொத்த ஞானமும், கல்வியும், பரம்பொருளிடமிருந்து ஒரு வித்தையை கற்கவேண்டிய முறைகளை ஒரு மனிதன் புரிந்துகொள்ள, தெரிந்துகொள்ள .........



அறிவுபூர்வமாக கேட்பவர்களுக்கு இப்படி வைத்துக் கொள்ளலாம். இறைவன் நேரடியாக ஒரு மனிதனுக்குள் புகுந்துகொண்டோ அல்லது தன் ஆற்றலை பாய்ச்சியோ எவ்வாறு இதை செய்யமுடியும் ? என்று கேட்பவர்களுக்கு, அந்தந்த தெய்வங்களுக்குரிய நாமாவளியை அல்லது தெரிந்த மந்திரத்தை உள்ளன்போடு உருவேற்ற, உருவேற்ற எதை எண்ணி மனிதன் உருவேற்றுகிறானோ, சிந்தனையில் அந்தப் பகுதி ஜொலிக்கத் துவங்கும். அது அவனுக்குள் இன்னும் மெருகேறத் துவங்கும். இன்னும் ஒருவகையில் கூறப்போனால் அது அவனுக்குள்ளேயே இருக்கிறது. அது எங்கே ? என்பதை அவனுக்கு ர்இறைவன் சுட்டிக்காட்டுகிறார்