Wednesday, April 9, 2014

2014 தமிழ் ஜய வருட பலன்கள்-கும்பம்

11-kumba-rasi  கும்பம்: அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு…….)



உங்கள் இராசிநாதன் சனி 9-ல் அமர்ந்து விட்டார். சந்திரன், செவ்வாயோடு இணைந்து நற்பலனை தருவார். 8-ல் அதாவது, அன்றைய தினம் சந்திராஷ்டமம் ஆயிற்றே என்று நீங்கள் நினைக்கலாம். 6-க்குரியவன் 8-ல் மறைவது நன்மையே செய்யும். ஆகவே கவலை இல்லை. ஜென்மத்தில் சுக்கிரன் உள்ளார். அதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கை அமையும். குடும்பத்தில் புதன் அமைந்ததால், சுபகாரியங்கள் செய்து வைப்பார். பாக்கியத்தில் சனி, இராகு. சொத்துக்கள் விஷயத்தில் பார்த்து வாங்கவும். சில பிரச்னைகள் தலை தூக்கும். எச்சரிக்கை தேவை. கல்வி துறையில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் சற்று பிரச்சனை உருவாகும். ஆகவே நிதானம், கவனம் தேவை. லாபத்தை குரு பார்வை செய்வதால், தொல்லைகள் அகலும்.

குரு பகவான் 12-6-2014 வரை உங்கள் ராசிக்கு 5-ஆம் இடத்தில் உள்ளார். இங்கு அவர் பல்வேறு நன்மைகளைத் தந்துகொண்டிருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். திருமணம்போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிட்டும். இதனால் வாழ்க்கையில் வளம்காணலாம். இதுதவிர குருவின் 5-ஆம் இடத்துப் பார்வையும், 7-ஆம் இடத்துப் பார்வையும் சாதகமாக அமைந்துள்ளது. இதனால் கூடுதல் நன்மை கிடைக்கும்.
குரு பகவான் சஞ்சரிக்கும் 5-ஆம் இடம் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம். எனவே உங்களுக்கு குலதெய்வ அருளும், குரு பகவான் அருளும் கிடைக்கின்றது. பூர்வீக சொத்தில் ஒருசிலருக்கு இருந்துவந்த வில்லங்கம் நீங்கும். பாகப்பிரிவினைகள் இனிதாக நிறைவேறும். ஒருசிலர் பூர்வீகத்தில் புதிய வீடு கட்டுவார்கள். சிலர் பூர்வீக வீட்டை மராமத்து செய்வார்கள். பிரிந்து சென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். விவாகரத்து போன்ற வழக்குகளை சந்தித்து வருகிறவர்கள், வழக்குகளை விலக்கிக்கொண்டு ஒன்றுசேர்வார்கள்.
குழந்தைகளின் எதிர்கால நன்மைக்காக நீங்கள் அதிகம் உழைப்பீர்கள். அரசாங்கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் வந்துசேரும். ஒருசிலர் அரசு மானியத்துடன் வங்கிக்கடனைப் பெறுவார்கள். அரசியல் பிரமுகர்களுக்கு எட்டாக் கனியாக இருந்துவந்த பதவி வலிய வந்துசேரும். சமூகத்தில் நல்ல அந்தஸ்தும் மரியாதையும் உருவாகும். இதுவரை வாட்டி வதைத்துவந்த நோய் குணமாகும். பழைய கடன் பாக்கிகள் பைசலாகும். உங்களுக்கு வரவேண்டிய பாக்கிகளும் வந்துசேரும். போட்டி வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். உயர்பதவிக்காக எழுதிய தேர்வில் வெற்றியடைந்து, பதவிக்கான உத்தரவையும் பெறுவார்கள்.
குரு பகவான் 13-6-2014 முதல் உங்கள் ராசிக்கு 6-ல் (கடக வீட்டில்) சஞ்சரிக்கிறார். 6-ஆம் இடமென்பது எதிரி, கடன், நோய் ஸ்தானம். ஆனால் இது உங்கள் ராசியை பாதிக்காது. ஏனெனில், குரு பகவான் 9-ஆம் பார்வையாகத் தன் சொந்தவீட்டைப் பார்க்கிறார். குரு ஒரு ராசியில் அமர்ந்து தன் சொந்தவீட்டைப் பார்த்தால், அதிகமாக பாதிக்கமாட்டார். சுய ஜாதகத்தில் குரு பகவான் சாதகமாக இருக்கப் பிறந்த கும்ப ராசி அன்பர்கள் நல்ல லாபத்தையே அடைவார்கள். அரசுப் பணியில் உள்ளவர்கள் தங்கள் பணிகளை எச்சரிக்கையாகச் செய்யவேண்டும். ஒருசிலருக்கு பணியில் குற்றம் ஏற்பட்டு, தற்காலிகப் பணிநீக்கம் போன்ற தண்டனைகளை அடையநேரும். வங்கியில் கடன்பெற்றிருந்தால், அதனைத் திரும்பச் செலுத்துவதில் காலதாமதம் ஏற்படலாம்.
குரு பகவான் 6-ல் உள்ள காலம்- அதாவது 13-6-2014 முதல் வாகனங்களில் மிகவும் எச்சரிக்கையாகச் செல்லவேண்டும். ஒருசிலருக்கு கை, கால்களில் கட்டுப்போடும் நிலை ஏற்படும். எனவே நடக்கும்போதுகூட மிகவும் கவனமாகச் செல்லவேண்டும். சிறு விபத்துகள் வருவதைத் தவிர்க்கலாம். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். கருத்து வேறுபாடுகள் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வதில் தாமதம் ஏற்படும்.
16-12-2014 வரையிலும் சனி பகவான் உங்கள் ராசிக்கு சாதகமற்ற நிலையிலுள்ளார். என்றாலும், அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். அவர் துலா ராசியில் அமர்ந்து 3, 7, 10-ஆம் இடங்களைப் பார்க்கிறார். மூன்று பார்வைகளும் உங்களுக்கு சிறப்பாக உள்ளன. 3-ஆம் இடத்துப் பார்வையால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும் ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் உறுதுணையாக இருப்பார்கள். 7-ஆம் இடத்துப் பார்வையால் காரிய அனுகூலமும், பொருளாதார வளமும், குடும்பத்தில் மகிழ்ச்சியும், தொழில் விருத்தியும் ஏற்படும். 10-ஆம் இடத்துப் பார்வையால் பகைவர்களின் சதியை முறியடிப்பீர்கள். உங்களது ஆற்றல் மேம்படும். உங்களுக்குப் பலவகையிலும் மதிப்பும் மரியாதையும் தருவார்கள்.
உங்கள் ராசிக்கு 9-ல் உள்ள சனி பகவான் எப்போதும் எதிர்பாராத நன்மைகளை வழங்குவார். அரசியல்வாதிகளுக்கு அரசியலில் ஏற்பட்ட குழப்ப நிலை மாறும். புதிய மாற்றங்கள் ஏற்படும். எலக்ட்ரானிக் துறையில் படித்தவர்களுக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு கிட்டும். தங்க நகை வியாபாரம் செய்கிறவர்கள் நல்ல லாபத்தை அடைவார்கள். தீயவர்கள், நல்லவர்கள்போல பழகிவருவார்கள். இனிய வார்த்தைகளைக் கூறி, உங்கள் சேமிப்புகளை லாபமில்லாத வகையில் முடக்கப் பார்ப்பார்கள். உங்கள் வசமுள்ள கையிருப்புகளை மிகவும் எச்சரிக்கையாக- பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் தொல்லைகள் வந்து நீங்கும்.
16-12-2014 முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 10-ல் வருகின்றார். அதனால் ஒருசில அரசு ஊழியர்கள் இடமாற்றத்தைச் சந்திப்பார்கள். ஒருசிலர் கட்டாய ஓய்வில் செல்வார்கள். லாகிரி வஸ்து விற்பனை செய்கிறவர்கள், உற்பத்தியாளர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஒருசிலருக்கு உடல்நலக் குறைவுகள் உண்டாகலாம். சனி 10-ல் வருவது நன்மைகளைத் தரும் என்றாலும், நீங்கள் எச்சரிக்கையாக வாழவேண்டும்.
ராகு பகவான் 21-6-2014-ல் கன்னி ராசிக்கு வருவார். இது உங்கள் ராசிக்கு 8-ஆம் வீடு. நீங்கள் சற்று கவனமுடன் காலத்தைக் கழிக்கவேண்டும். சுய ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் உள்ளவர்கள் ஓரளவு நன்மைகளை அடைவார்கள். அப்படி இல்லாதவர்களுக்கு, சற்று கெடுதலான பலன்கள் நடக்கலாம். கும்ப ராசி அன்பர்கள் 8-ல் ராகு உள்ள இந்த நேரத்தில் வாகனம் வாங்கும் திட்டத்தைக் கைவிடவேண்டும். மிகவும் நிதானத்துடன் தெய்வ பக்தியுடன் நடந்தால் கெட்ட பலன்கள் அகலும்.
பொதுவாக 8-ல் உள்ள ராகு அளவில்லாத பொருட்செல்வத்தைத் தருவார். நல்லதே நினைத்து வாழும் ஆண்- பெண் இருபாலருக்கும் நல்ல வரன்கள் அமையும். அரசுப் பணியில் உள்ளவர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதலில் செல்வார்கள். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணப்புழக்கம் கூடும்.
விவசாயம் சார்ந்த தொழில் செய்கிறவர்கள் நல்ல பலன்களை அடைவார்கள். பிள்ளைகள் வெளிநாடு சென்று பொருளீட்ட போட்ட திட்டம் நிறைவேறும். ஏற்கெனவே வெளிநாடு சென்றுள்ளவர்கள் இன்னும் அதிகமான சம்பளத்துடன்கூடிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். 8-ல் உள்ள ராகு பகவான் வயதானவர்களுக்கு, நரம்பு சம்பந்தப்பட்ட தளர்வுகளைத் தருவார். பிரிந்துசென்ற கணவன்- மனைவி ஒன்றுசேர்வார்கள். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் ஒருசிலருக்கு வந்துசேரும்.
உறவினர் வகையில் மனக்கசப்புகள் ஏற்படும். ராகு பகவான் 8-ல் உள்ள இந்த நேரத்தில் நல்ல பலன்களை அடைந்திட, ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை) பைரவருக்கு, 27 எலுமிச்சம் பழத்தை மாலையாகக் கோர்த்துப் போடவேண்டும். இதேபோல ஒன்பது ஞாயிற்றுக்கிழமைகள் வழிபடவேண்டும்.
21-6-2014 முதல் கேது பகவான் உங்கள் ராசிக்கு 2-ல் (மீன வீட்டில்) வருவார். குடும்ப ஸ்தானத்தில் வருவதால் ஒருசிலருக்கு எதிரிகளால் தொல்லை ஏற்படும். கைப்பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் பொருட்கள் திருடுபோக வாய்ப்புகள் உள்ளன. எனவே நகைபோன்ற விலையுயர்ந்த பொருட்களை லாக்கரில் வைத்துக்கொள்ள வேண்டும். தேவைப்படும்போது குறைந்த அளவு எடுத்துக்கொள்ளலாம்.
நிதானப் போக்கைக் கொண்ட கும்ப ராசி அன்பர்கள் எல்லாரும் நல்ல பலனை அடைவார்கள். முரட்டு சுபாவம், முரட்டுப் பேச்சு உள்ளவர்கள் தங்கள் பேச்சால் கெட்ட பெயர் எடுப்பார்கள். பின்பு தங்களைத் திருத்திக்கொண்டு பொருளாதார உயர்வுக்கான வழிகளைக் காண்பார்கள். குலதெய்வத்தை வணங்கி வருவோருக்கும் நல்ல பலன்கள் கிட்டும். உங்கள் வாக்கு ஸ்தானத்தில் கேது சஞ்சாரம் செய்கின்றார். எனவே நீங்கள் எப்போதும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அந்நிய மொழி பேசுபவர்கள், மாற்று மதத்தவர்கள் உங்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பார்கள். பிள்ளைகள் வகையில் அனைத்து சுபகாரியமும் நடக்கும்.
சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு கடன் பெறாத வகையில் வருமானம் கூடும். அதிகாரத் தோரணையில் பேசுவதால் காரியங்கள் கெட்டுவிடும். எல்லாருடனும் கனிவான பேச்சுடன் பழகினால் காரியம் அனைத்திலும் வெற்றியைக் காணலாம். குடும்பச் சுமைகள் கூடுமென்றாலும், புதிய யுக்திகளைக் கையாண்டு பொருளாதாரத்தை வளப்படுத்திக்கொள்வீர்கள். ஒருசில கும்ப ராசி அன்பர்கள் வெளிநாடு செல்வார்கள். சென்ற இடத்தில் நல்ல பொருளாதாரத்தையும் அடைவார்கள்.

பெண்கள்
மிகவும் நிதானத்துடனும் சிக்கனமாகவும் நடந்துகொள்ளவேண்டும். கருத்து வேறுபாடு ஏற்படாத வகையிலும் நடந்துகொள்ளவேண்டும். 13-6-2014 முதல் நீங்கள் காட்டிய பொறுமைக்கு நல்ல பலனைக் காண்பீர்கள். 12-6-2014-க்குள் திருமண நிகழ்ச்சிகள் நடக்கும். நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். 12-6-2014-க்குள் பொன், பொருள், நகை வாங்கிச்சேர்ப்பீர்கள். வேலைக்குப் போகும் பெண்கள் அதிகமான சலுகைகளை அடைவார்கள்.

மாணவர்கள்
மாணவர்கள் 12-6-2014-க்கு முன்பு நடக்கும் இந்தக் கல்வியாண்டில் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். அதன்பிறகு கல்வியில் மிகவும் கவனமாகப் படித்து முன்னேற வேண்டும்.

தொழிலதிபர்கள்- வியாபாரிகள்
தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க அனுகூலமுண்டு. அந்தத் தொழிலையும் 12-6-2014-க்குள் ஆரம்பிக்கவேண்டும். 13-6-2014-க்குமேல் தொடங்கினால் அதிகமாக உழைத்து, சிரமப்பட்டு தொழிலைக் காப்பாற்றவேண்டியது வரும். கடல் வாணிபம், டீசல், பெட்ரோல், வாசனை திரவியம், பாதரசம் விற்பனை செய்கிறவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அழியும்பொருள் வியாபாரம் சிறப்பைத் தரும். கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து தொழில் செய்கிறவர்கள் கெடுதல்களை அடைவார்கள்.

விவசாயிகள்
முதல் ஐந்து மாதங்களுக்கு, நீங்கள் விளைவித்த பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். அதன்பின்பு விவசாயத்தை நடத்த சிறுசிறு சிரமங்களை சந்திக்கவேண்டியது வரும். இருப்பினும் பாதகமான நிலை ஏற்பட வாய்ப்புகள் இல்லை. சிலர் புதிய நிலம் வாங்குவார்கள். நவீன கருவிகள் மூலம் செய்யும் சாகுபடியில் நல்ல பலன்கள் கிடைக்கும். பணப்பயிர் செய்பவர்கள் இந்த ஆண்டு லாபம் பெறுவார்கள். ஒரேமாதிரி விவசாயத்தைச் செய்துவந்த விவசாயிகள், காலத்துக்கேற்றவாறு விவசாயம் செய்து அதிக மகசூலைப் பெறுவார்கள்.

அரசுப் பணியாளர்கள்
அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிட்டும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். 13-6-2014 முதல் வேலைப் பளு அதிகரிக்கும். வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு 12-6-2014-க்குள் வேலை கிட்டும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் போலீஸ் மற்றும் பாதுகாப்புத் துறையில் வேலைபார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். 12-6-2014-க்குள் எதிர்பார்த்த பதவி உயர்வு வந்துசேரும். பொதுவாக அரசு ஊழியர்கள் தங்களுடன் பணிபுரியும் சகஊழியர்களுடன் கனிவாகப் பேசவேண்டும். பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

கலைத்துறையினர்
கலைஞர்களுக்கு அதிகமான படவாய்ப்புகள் கிட்டும். 12-6-2014 வரையிலும் வருமானம் கூடுதலாக வரும். உங்களின் பிள்ளைகளால் தொல்லைகள் உருவாகும். எனவே அவர்கள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

அரசியல் பிரமுகர்கள்
12-6-2014 வரையிலும் குரு பகவான் சாதகமான நிலையில் செயல்படுகின்றார். எனவே எம்.பி. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வெற்றியடையலாம். குரு 5-ல் உள்ளதால் குலதெய்வ அருள் உங்கள் வெற்றிக்குக் கைகொடுக்கும். 13-6-2014 முதல் நிதானித்துச் செயல்படுங்கள்.

75% நன்மை
இந்த ஆண்டு கும்ப ராசி அன்பர்கள் 75 சதவிகித நன்மை அடைவார்கள். 11 பங்கு லாபம் உண்டு. விரயம் 4 பங்கு உள்ளது. ஆரோக்கியம் 4 பங்கு, அவஆரோக்கியம் 4 பங்கு, ராஜபூஜிதம் 2 பங்கு, 3 பங்கு சுகம், 3 பங்கு துக்கம் உள்ளது. ராஜயோகம் 6 பங்கு (வேலை பார்க்காதவர்களுக்கு அரசு வேலை வரும். குடும்பத்தில் யாரேனும் ஒருவர் வேலைக்குச் செல்வார்கள்.)

அவிட்டம் மற்றும் சதய நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை ஆறு பங்கு வருமானம் உள்ளது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சேமிப்பை உயர்த்திக் கொள்வீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும்.

ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானம் சிறப்பாக இருக்காது. எனவே மிகவும் சிக்கனமாக செலவுசெய்யவேண்டும். கடந்த காலத்தில் சேமித்தது இப்போது கைகொடுக்கும்.
மார்கழி முதல் பங்குனி வரை ஓரளவு வருமானமுண்டு. கூடுதல் வருவாயைப் பெற சிறப்பாக உழைக்கவேண்டும். இந்தக் காலத்தில் உங்களுக்கு சௌபாக்கியம் ஏற்படும். தனலாபம் ஏற்படும். எதிர்கால யோகமும் உண்டு.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை நான்கு பங்கு லாபம் உண்டு. குடும்பத்தில் வருமானம் கூடும். தாய்மாமன் நிலை உயரும். சேமிப்பு கூடும். பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானத்திற்குக் குறைவில்லை. எப்போதும்போல குடும்பச்செலவுகள் இருக்கும். குடும்பத்தில் சௌபாக்கியம் ஏற்படும்.மார்கழி முதல் பங்குனி வரை ஓரளவு வருமானம் வரும். கடந்த காலங்களில் உள்ள சேமிப்பு இப்போது கைகொடுக்கும். எதிர்காலம் நல்ல பலன்களைத் தரும். தனலாபம் உண்டு.

ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிடப் பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை) பைரவருக்கு 27 எலுமிச்சம் பழத்தை மாலையாகக் கோர்த்து அணிவிக்கவேண்டும். (ஆலயத்தில் உள்ள வழக்கப்படி மற்ற பரிகாரங்களும் செய்துகொள்ளவேண்டும்.) முடிந்தவரை மாதம் ஒருமுறை திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை தரிசித்துவர, நன்மைகள் உண்டு. தினசரி சூரிய நமஸ்காரம் செய்துவர, சிரமங்கள் குறையும்.