Wednesday, April 9, 2014

2014 தமிழ் ஜய வருட பலன்கள்-துலாம்

7-thula-rasi

துலாம்:     சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு…….)


உங்கள் இராசிநாதன் சுக்கிரன், 5-ம் இடத்தில் அமைந்துள்ளார். 12-ம் இடத்தில் சந்திரன், செவ்வாயோடு இணைந்துள்ளான். 12-ம் இடம் மறைவு என்றாலும், புதன் பார்வையால், மறைந்தவன் நிறைந்து தருவான். ஆகவே கவலை இல்லை. உங்கள் ஜென்மத்தில் சனி, இராகு இணைந்து, எதிர்பாரா யோகத்தை கொடுப்பார்கள். காரணம், சனி 5-க்குரியவன். ஆகவே சுபநிகழ்ச்சிகள் வீட்டில் நடக்க இருக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் அமையும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் இருந்தால் தீரும். பங்காளி சண்டை தீரும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். வாகன பயணத்தில் நிதானம் தேவை. 8-க்குரிய சுக்கிரன் 6-ல் உள்ளதால், மனைவியால் எதிர்பாரா லாபம் உண்டு. சப்தமத்தில் சூரியன் உச்சம். நண்பர்கள் உதவி வந்தடையும்.
 
 
13-6-2014 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-ல் இருப்பார். அதுவரையிலும் வாழ்க்கையில் வசந்தகாலம். புதன் வீட்டில் இருக்கும் அவர், தன் சொந்தவீட்டை 7-ஆம் பார்வையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். 13-6-2014-க்குள் நீங்கள் ஏதாவது ஒரு சொத்தை கூடுதல் விலைக்கு விற்று ராஜயோகமான வாழ்க்கை வாழ்வீர்கள். மனைவிமூலம் தனலாபம் கிடைக்கும். தொழில் வகையில் ஏற்பட்ட விரோதம் நீங்கி ஒற்றுமை நிலவும். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். விவசாயிகள் கூடுதலாக விவசாயம் செய்து நல்ல மகசூலை அடையலாம். ஒருசிலர் புதிய வீடுகட்ட போட்ட திட்டம் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள்.
வெளிநாடு சென்று உயர்கல்வி படிக்க நினைத்த எண்ணம் கைகூடும். இதுவரையில் இருந்துவந்த தடை நீங்கும். வயதுவந்த பிள்ளைகளிடம் பெற்றோர்கள் கோபமாகப் பேசக் கூடாது. திருமண வயதுள்ள ஆண்- பெண் இருபாலரையும் கண்காணிக்க வேண்டும். அவர்களில் சிலர் காதல் திருமணம் செய்துகொள்ளும் சூழ்நிலை உருவாகலாம்.
13-6-2014 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ல் கடகத்தில் வருகிறார். ராசிக்கு 10-ஆம் இடம் என்பது ஜீவனஸ்தானம். குரு 10-ல் வருவது சிறப்பில்லை என்றாலும், உங்கள் சுயஜாதகத்தில் குரு நல்ல இடத்தில் இடம் பெற்றிருந்தால் அதிக கஷ்டங்களை அனுபவிக்க மாட்டீர்கள்.
13-6-2014 முதல் எதிலும் சிக்கன நிலையைக் கையாளவேண்டும். வருமானம் முன்புபோல் இல்லாமல் சற்று குறையும். புதிய கடன் வாங்க நேரலாம். வரவுக்குள் செலவுசெய்து புதிதாகக் கடன்படுவதைத் தவிர்க்கலாம். மளிகைக்கடை நடத்துபவர்கள் இந்த ஆண்டில் அதிக லாபத்தைப் பெறுவார்கள். உணவு வகை, நவதானியம், எண்ணெய் வகை வியாபாரம் மேற்கொள்கின்றவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மொத்த வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள்.
குரு பகவானால் பொருள் விரயம் ஏற்படலாம். இழப்பையும் தரலாம். மனசஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். குரு பகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5-ஆம் இடத்துப் பார்வை சிறப்பாக அமையும். அதன்மூலம் உங்கள் ஆற்றல் மேம்படும். மந்தநிலை மறந்து சுறுசுறுப்பு ஏற்படும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். பகைவர்களின் சதித்திட்டம் உங்களிடம் எடுபடாது. அவர்கள் உங்களிடமிருந்து ஒதுங்கிக்கொள்வார்கள்.
சனி பகவான் உங்கள் ராசியில் உள்ளார். அவரால் ஒருசிலருக்கு உடல் உபாதைகள் வரலாம். உறவினர்கள் வகையில் வீண்கசப்பு உருவாகலாம். வெளியூர் வாசம் ஏற்படும். 16-12-2014 வரையிலும் சனி பகவான் அதே இடத்தில்தான் இருப்பார். அதற்காக பயம்கொள்ளக்கூடாது. மற்ற கிரகங்களால் நன்மை கிடைக்கும். சனி பகவான் தான் நிற்கும் இடத்திலிருந்து 3, 7, 10-ஆம் இடங்களைப் பார்க்கிறார். அந்தவகையில் அவரது 3-ஆம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்துள்ளது. அதன்மூலம் பொருளாதார வளத்தைக் காணலாம். எடுத்த காரியம் சிறப்படையும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். மேலும் 4-3-2014 முதல் 19-7-2014 வரையிலும் சனி பகவான் வக்ரம் அடைகின்றார். இந்த காலகட்டத்தில் அவரால் சிறப்பாகச் செயல்பட முடியாது. உங்களுக்கு சாதகமற்ற நிலையிலுள்ள சனி பகவான், செயல்படமுடியாமல் போவது உங்களுக்கு சாதகம். மேலும் அப்போது அவரால் நன்மை கிடைக்கவும் வாய்ப்புண்டு.
சனி பகவான் உங்கள் ராசியில் அமர்ந்து ஜென்மச் சனியாக உள்ள இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். கூட்டுத் தொழில் செய்கின்றவர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரலாம். எனவே முன்பைவிட மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நண்பர்களால் ஏமாற்றம், நம்பிக்கை மோசடி ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வதால் கருத்து வேறுபாடுகள் வராமல் தவிர்க்கலாம். பிரிவு வராது. மற்றவர்கள் உங்களுக்கு உதவுவதாக கொடுத்த வாக்கை நம்பி தொழில் செய்யக்கூடாது. உங்களுடன் பணிபுரிகின்றவர்களுக்கு நீங்கள் பரிந்துபேசுவதால் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.
இந்த காலகட்டத்தில் குழப்பங்கள் நீங்கிட சனி பகவானை வணங்கவேண்டும். உடல்நிலையில் அதிக பாதிப்புகளை கொடுக்கமாட்டார். நண்பர்களை அடையாளம் கண்டுகொள்வீர்கள். ஆபத்துக்கு உதவாத நண்பர்களைவிட்டு விலகிச்செல்வீர்கள். பெண்கள் சனி பகவானை வழிபட்டால் கணவருக்கு நல்ல திருப்பங்கள் வரும். 17-5-2014-க்குள் சனி பகவான் உங்கள் வீட்டில் சுபகாரியப் பேச்சுகளைக் கொண்டுவருவார். பிள்ளைகளின் தடைப்பட்ட கல்வி உயரும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். வேலையிழந்த அரசு ஊழியர்கள் மீண்டும் வேலைவாய்ப்பினைப் பெறுவார்கள்.
அரசாங்க நன்மைகளையும் அடைவார்கள். உயர்கல்வியிலுள்ள மாணவர்கள் தேர்ச்சி பெற்று, உடனடியாக வேலைவாய்ப்பையும் பெறுவார்கள். ஜீவனப் பாதையில் புதிய வருமானம் வந்துசேரும். குழப்பம் குறையும். தொழில், வியாபார முடக்கம் நீங்கி வருமானம் கூடும். பழைய கடன்கள் பைசலாகும். வேலைதேடும் இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வந்துசேரும். விவசாயிகளுக்கு பணவரவு அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்றவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும்.
16-12-2014-ல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ல் வருகிறார். அந்த காலகட்டத்திலிருந்து அடுத்த சனிப்பெயர்ச்சி வரை நீங்கள் மிகவும் கவனமுடன் செயல்படவேண்டும். எல்லா வகையிலும் நிதானமாகச் செயல்பட வேண்டும்.
21-6-2014 முதல் ராகு பகவான் உங்கள் ராசிக்கு 12-ல் உலாவருகிறார். அதிக அலைச்சலையும், அதன்மூலம் லாபத்தையும் தருவார் என்பது பொதுவான விதி. அலைச்சல் பயனுள்ள- பலனுள்ள அலைச்சலாக இருக்கும். 12-ல் ராகு வந்தால் விரயங்கள்தான் வருமென்று சொல்வார்கள். உங்கள் சுயஜாதகத்தையும், குடும்ப ஜாதகத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும். அதில் ராகு பகவான் லாபம் தரும் நிலையிலிருந்தால், 12-ல் உள்ள ராகுவால் லாபகரமான பலன்களே வரும். ராகுபகவான் தற்போது நல்ல பலன்களையே தருவார். நீங்களே ஆச்சரியப்படும் வகையில் உங்களது எல்லா செயல்களும் வெற்றியாக மாறும்.
ஒருசிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வந்துசேரும். இப்போது உங்கள் உழைப்பால் லாபங்கள் அதிகம் வரும். அதனை உடனுக்குடன் சுபவிரயச் செலவாக மாற்றவேண்டும். பொன்நகைகளை வாங்கிச் சேர்க்கலாம். அல்லது இடம் போன்றவற்றை வாங்கி வைக்கலாம். உழைத்துச் சேர்க்கும் பணம் விரயச் செலவாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஒருசிலர் அடகுபோன பொருட்களையும், சொத்துகளையும் மீட்பார்கள். எந்தத் துறையைத் தேர்வு செய்தாலும் அதில் நல்ல உழைப்பைக் கொடுத்து லாபத்தை அடைவீர்கள்.
ஒருசிலருக்கு மலச்சிக்கல் போன்ற பிணிகள் வரும். உடல்நிலை கெடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். காரியம் அனைத்திலும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் போகாது. எல்லா வகையிலும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அரசு ஊழியர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று செல்லவேண்டும். உடன்பணிபுரியும் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். வெளிவட்டாரப் பழக்கத்தில் நன்மை வராது. எனவே மிகவும் எச்சரிக்கையுடன் வாழவேண்டும்.
21-6-2014 முதல் கேது பகவான் உங்கள் ராசிக்கு 6-ல் வருவதால் யோகம் உண்டாகும் என்பது பொதுவான ஜோதிடச் சொல். சுய ஜாதகத்தில் கேது இருக்கும் நிலையைப் பொறுத்து பலன்கள் வரும். அதற்கான பரிகாரமும் செய்துகொள்ள வேண்டும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாகவே இருப்பார்கள். இருப்பினும் நண்பர்களிடம் உங்கள் ரகசியங்களை சொல்லக்கூடாது. ஏனெனில் 6-ல் கேது உள்ள இந்த நேரத்தில், நண்பர்கள் உங்களுக்கு எதிராகச் செயல்படக்கூடும். வேறு பாதிப்புகளோ விபத்தோ வராது. உங்கள் கருத்துக்கு எதிராகச் செயல்படுபவர்களை வேகமாக வளரவைப்பார் கேது பகவான். எனவே நீங்கள் உங்கள் அருகிலுள்ளவர்களிடம் மிகவும் அனுசரணையாகச் செல்ல வேண்டும்.
புதிய ஒப்பந்தங்கள், புதிய முயற்சிகள் செய்யும்போது, சம்பந்தப்பட்டவர்களிடம் சரியான வழிமுறைகளை எழுதி வாங்கி, பின்பு செயல்பட வேண்டும். மாற்று மதத்தினர், வெளிமாநிலத்தில் உள்ளவர் களால் அதிக லாபம் கிடைக்கக்கூடிய தொழில் அமையும். குடும்பத்தில் பல சீர்திருத்தங்கள் நடக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். ஒருசிலர் வெளிநாடுகளில் அதிக லாபத்துடன்கூடிய தொழிலைச் செய்வார்கள். காலம்காலமாய் இருந்துவந்த பங்காளிகள் சண்டை நீங்கும். கேதுவுக்குப் பரிகாரம் செய்துகொண்டால், கேதுவால் கெடுதல் வராது.
பொதுவாக 6-ல் உள்ள கேது, நாம் மற்றவர்களுக்கு கெடுதல் செய்தால் தான் கெடுதல் செய்வார். திருமணம் முடியாதவர்களுக்கு நல்ல வரன் வந்து சேரும். குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். தொல்லை கொடுத்த வழக்குகள் சாதகமாகச் செல்லும். ஒருசிலர் வீடுவாங்க போட்ட திட்டம் நிறைவேறும். கடிதத் தொடர்புகளில் நல்ல தகவல்கள் வந்துசேரும்.

பெண்கள்

12-6-2014 வரை வீட்டுச் செலவுக்குரிய பணம் தடையின்றிக் கிடைக்கும். அடுத்த காலகட்டத்தில் முன்புபோல் வரவு வராது. சேமிப்பு உங்களுக்குக் கைகொடுக்கும். திருமண வயதுப் பெண்களுக்கு நல்ல வரன் அமையும். மனதில் பட்டதை வெளியில் சொல்லக்கூடாது. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.

மாணவர்கள்

இந்தக் கல்வியாண்டில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். அடுத்த கல்வியாண்டில் படிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும். உங்கள் விடாமுயற்சிக்குத் தகுந்த மதிப்பெண்களை குருவின் பார்வையால் பெறலாம். மாணவர்கள், ஆசிரியர்கள் உறவு சுமுகமாக இருக்கும்.

தொழிலதிபர்கள்- வியாபாரிகள்
தொழிலதிபர்களும் வியாபாரிகளும் சிறப்பான பலனை அடைவார்கள். அதிக வருமானத்தையும் காண்பார்கள். தற்போது உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெற்று வருகின்றது. எனவே எதிலும் அதிக முதலீடு செய்யக்கூடாது. கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் 12-6-2014-க்குள் கிடைக்கும். கடுமையான போட்டி இருக்கும். சற்று கவனத்துடன் செயல்பட்டால் பாதிப்பு எதுவும் வராது.

விவசாயிகள்
கால்நடை வளர்ப்போர் அதிகமான லாபங்களைப் பெறுவார்கள். விவசாயம் சிறப்படையும். அக்டோபருக்குப் பிறகு நிலம், வீட்டுமனை வாங்கலாம். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.

அரசுப் பணியாளர்கள்

அரசு ஊழியர்கள் தற்போது அனைத்து சலுகைகளையும் பெறுவார்கள். மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். 12-6-2014-க்குள் வேண்டிய பதவியும் மாறுதலும் கிடைக்கும். அதேபோல வேலையில்லாமல் உள்ளவர்கள் புதிதாக வேலை கிடைக்கப் பெறுவார்கள். 13-6-2014 முதல் அரசு ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் வேலைப் பளுவை சந்திப்பார்கள். சிலர் இடமாற்றத்தைக் காண்பார்கள். பாதுகாப்பு மற்றும் காவல்துறையில் இருப்பவர்கள் இந்த ஆண்டு இறுதியில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

கலைத்துறையினர்
புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். ஒருசிலர் அரசாங்க விருதுகளைப் பெறுவார்கள். சக கலைஞர்களிடம் மிகவும் எச்சரிக்கையாகப் பழக வேண்டும். வசதியுடன் வாழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழும் பாராட்டும் கிட்டும்.

அரசியல் பிரமுகர்கள்
உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் இப்போது உங்களைவிட்டு விலகிச் செல்வார்கள். எம்.எல்.ஏ. பதவியில் இருக்கும் ஒருசிலர், தாங்கள் எதிர்பார்த்த அமைச்சர் பதவியை அடைவார்கள். வாகனங்களில் அதிவேகமாகச் செல்வதைத் தவிர்க்கவேண்டும்.

75% நன்மை
இந்த ஆண்டு 75 சதவிகித நன்மைகளை அடைவீர்கள். 14 பங்கு லாபம் வரும். இரண்டு பங்கு விரயம் வரும். ஆரோக்கியம் 2 பங்கு, 5 பங்கு அவஆரோக்கியம் ஏற்படும். (எப்போதும் உணவுக் கட்டுப்பாடு அவசியம்). ராஜபூஜிதம் 8 பங்கு (வேலை தேடுவோர் வேலைவாய்ப்பை அடைவார்கள்), ராஜயோகம் 6 பங்கு, சுகம் 3 பங்கு, துக்கம் 3 பங்கு. எனவே நன்மையுண்டு.

சித்திரை மற்றும் சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு:

சித்திரை முதல் ஆடி வரை கூடுதல் வருமானம் வரும். சேமிப்பை உயர்த்துவீர்கள். வேண்டியது கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானம் சீராக இருக்கும். சிக்கனமாக செலவு செய்யவேண்டும்.மார்கழி முதல் பங்குனி வரை வருமானம் சுமாராக இருக்கும். எனவே எதிலும் நிதானித்துச் செயல்படவேண்டும்.

விசாக நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை சுமாரான வருமானம் வரும். நிதானமாக செலவு செய்தால், புதிய கடன்கள் ஏற்படாது.ஆவணி முதல் கார்த்திகை வரை கூடுதல் வருமானம் வரும். புதிய தொழில்கள் உங்களுக்கு லாபமாக அமையும். மார்கழி முதல் பங்குனி வரை அதிகமான லாபமும், வருமானமும் உண்டாகும். சௌபாக்கியம் ஏற்படும். தனலாபம் உண்டு. எதிர்காலம் யோகமாக அமையும்.

ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிடப் பரிகாரம்
வெள்ளிக்கிழமையில் லட்சுமி நரசிம்மரை வணங்கி வரவேண்டும். பசு மாட்டிற்கு பச்சரிசியும் வெல்லமும் கலந்து வெள்ளிக்கிழமைகளில் கொடுத்து வர, லாபம் கூடும்.