
உங்கள்
இராசிநாதன் குரு, 7-ல் வெகு
அமர்க்களமாக அமர்ந்து இருக்கிறான். கவலையே இல்லை. 10-ம்
இடத்தில் சந்திரன், செவ்வாய் இணைந்து, “சந்திர மங்கள யோகம்” உள்ளதால், எடுத்த காரியம் எல்லாம்
ஜெயம்தான். உத்தியோகம், தொழில் வெகு ஜோராக
நடக்கும். சுகஸ்தானத்தில் புதன். கல்வியில் மதிப்பெண்கள்
அதிகரிக்கும். மேற்படிப்பு தொடரும். சப்தம குரு, உங்கள்
கீர்த்தியை பெருகச்செய்யும். பஞ்சமத்தில் சூரியன், சொத்துக்கள் விஷயத்தில் வில்லங்கம் இருந்தால் தீர்த்து வைக்கும். ஜாமீன் விஷயத்தில் மட்டும்
கவனம் தேவை. குடும்பத்திற்கு தேவையான
பொருட்கள் வந்தடையும். வாகனம் வாங்கும் யோகம்
உண்டு. சிலருக்கு மனை வாங்கும் பாக்கியம்
கிட்டும்.
உங்களுக்கு, இந்த ஆண்டின் முற்பகுதியில் 12-6-2014 வரை அதிக நன்மைகள் நடக்கும். குரு பகவான் 7-ல் அமர்ந்து நல்ல பலன்கள் வழங்குவார். குரு பகவானின் 7-ஆம் பார்வையுள்ள இந்த காலகட்டத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நினைத்ததை நிறைவேற்றலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பொருளாதர வளம் மேம்படும். வீடு, மனை வாங்கலாம். மேலும் குரு பகவானின் 5-ஆம் இடத்துப் பார்வையும் சாதகமாக உள்ளது. பொருளாதார வளம் மேம்படும்.
இந்த காலகட்டத்தில் ஒருசிலர் தூரதேசத்தில் வாழ்கின்றவர்களின் சொத்தை குத்தகைக்கு எடுத்து, அதன்மூலம் நல்ல லாபத்தை அடைவார்கள். பிறந்த ஜாதகத்தில் குரு பகவான் உச்சம், ஆட்சி வீடுகளில் இருந்தால், அவர்கள் தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு குத்தகை ஒப்பந்தம் போடுவார்கள். தற்காலிகப் பணிநீக்கத்திலுள்ள அரசு ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்வார்கள்.
தனியார் துறையில் பணிபுரிந்து, தற்போது வேலையில்லாமல் இருப்பவர்கள் வேறு கம்பெனிகளில் புதிய பொறுப்புகளில் அமர்வார்கள். அவர்களது செல்வாக்கும் கூடும். விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் அதிகமான லாபத்தை அடைவார்கள். ஒருசிலர் புதிதாக நெல் அறுவடை இயந்திரம், ஜே.சி.பி. போன்ற இயந்திரங்களை வாங்குவார்கள். கூடுதல் லாபத்தையும் பெறுவார்கள். உங்கள் எந்திரங்கள் ஓய்வெடுக்கக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும். நீண்டகாலமாக குடும்பத்தில் தடைப்பட்டுவந்த சம்பந்தம் வந்துசேரும். அரசாங்கத்திலுள்ள கடன்களைக் கட்டி நிவர்த்தி பெறுவீர்கள். ஒருசிலர் அடகு வைத்த நகைகளை பாக்கியின்றி மீட்பார்கள்.
12-6-2014 வரையிலும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ல் நின்று மேற்கண்டவாறு நல்ல பலன்களை வழங்குவார். எனவே மேற்கண்ட காலங்களில் வரும் வருவாயை அடுத்த ஓராண்டுக்குப் பயன்படும் வகையில் சேமித்து வைத்துக்கொண்டால், புதிய கடன்கள் ஏற்படாது.
13-6-2014 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 8-ல் அமர்வார். அவர் கடகத்தில் உச்சம்பெற்று தன் சொந்தவீட்டை 9-ஆம் பார்வையாகப் பார்ப்பதால் கூடுதல் உழைப்பையும், லாபத்தையும் தருவார். வாகனங்களில் செல்பவர்கள் பார்த்துச் செல்லவேண்டும். பெரும்பாலும் எல்லா வகையிலும் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கடகத்தில் குரு பகவான் இருக்கும் இந்த காலகட்டத்தில் வீணான மனக்குழப்பம் உண்டாகும். பணவிரயம் ஏற்படலாம். அதற்காக நீங்கள் அஞ்சவேண்டாம். குரு பகவான் சாதகமற்ற நிலையிலிருந்தாலும் அவரது 7-ஆம் இடத்துப் பார்வைக்கு தனிசக்தி உண்டு.
மகர ராசியில் விழும் 7-ஆம் பார்வை உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. குருவின் பார்வையால் கோடி நன்மைகளை அடையலாம் என்பது ஜோதிட வாக்கு. அந்த வகையில் உங்களுக்கு எந்த வகையில் இடையூறு வந்தாலும் குரு பகவான் சாதகமாக்கிவிடுவார். எனவே குரு 8-ஆம் இடத்தில் சாதகமற்று இருக்கின்றாரே என்று நீங்கள் கவலைகொள்ள வேண்டாம். அப்படியே குரு பகவான் சிறுசிறு இடையூறுகளைச் செய்தாலும், அது உங்களுக்குப் பாடம் புகட்டுவது போலத்தான் இருக்குமேயன்றி தண்டனை கொடுப்பதாக அமையாது.
குரு பகவான் 8-ல் அமர்ந்துள்ள இந்த நேரத்தில், அவர் 9-ஆம் பார்வையாக தன் சொந்தவீட்டைப் பார்க்கிறார். எனவே தடை, தாமதங்கள் நீங்கும். அரசுப் பதவி தேடுகின்றவர்களில் சிலர் அதை அடைவார்கள். ஒருசிலர் தேர்தலில் வெற்றிபெற்று, அமைச்சர் பொறுப்புக்கும் வர வாய்ப்புகள் அதிகமுள்ளது. சிலருக்கு வயிற்று வலி போன்ற தொந்தரவு வரும். எனவே 27 கருப்பு கொண்டைக்கடலை எடுத்து மஞ்சள் துணியில் முடிந்து, எப்போதும் பர்சில் வைத்துக் கொள்ள, அனைத்தும் சாதகமாக நடக்கும்.
சனி பகவானைப் பொறுத்தவரையில் உங்கள் ராசிக்கு 11-ல் 16-12-2014 வரையிலும் இருப்பார். இது உங்களுக்கு சாதகமான இடம். இப்போது குரு பகவான் பல்வேறு நன்மைகளைச் செய்வார். அவரால் பொன், பொருள் வாங்குவீர்கள். மகிழ்ச்சியும் ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம்.
4-3-2014 முதல் 19-7-2014 வரையிலும் சனி பகவான் வக்ரநிலையில் உள்ளார். அதனாலும், நன்மையுண்டாகும். கெடுதல் என்பது அதிகம் வராது.
சனி பகவான் அருளால் தடை, தாமதங்கள் அனைத்தும் மாறும். எதிர்பாராத வகையில் எல்லா செயல்களிலும் நல்ல வருவாய் கிடைக்கும். ஒருசிலருக்கு மாமியார் வீட்டு சொத்து வந்துசேரும். சிலர் மாளிகை போன்ற வீட்டைக் கட்டி குடிபோவார்கள். சிலருக்கு எதிர்பாராத யோகமுண்டு. சிலருக்கு அரசியல் செல்வாக்கு அதிகமாக இருக்கும். நகைக் கடை அதிபர்கள் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெறுவார்கள். பழைய நகைகள் வாங்கிவிற்பவர்கள் யோசித்துச் செய்யவேண்டும். பழைய நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய நண்பர்களால் உதவி இருக்காது.
நீண்டகால திட்டங்களும் ஆசைகளும் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் உள்ளவர்கள் உங்களுக்குத் தேவையான உதவிகளை வலியவந்து செய்வார்கள். குடும்பத்தில் இதுவரை நடந்துவந்த குழப்பங்கள் நீங்கும். கடந்த காலத்தில் உங்கள் அனுபவத்தில் நிறைய இழப்புகளை சந்தித்திருப்பீர்கள். இனி அந்த இழப்புகள் 16-12-2014 வரையிலும் வராது.
16-12-2014 முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 12-ல் வருகின்றார். விரயச் சனி காலம் தொடங்குகிறது. எனவே உங்கள் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க வேண்டும். ஒருசில அரசியல் பிரமுகர்களுக்கு பதவியில் மாற்றம் வரும். ஒருசிலர் வழக்கு சம்பந்தமாக அலையநேரிடும். புதிய வாகனம் வாங்க போட்ட திட்டத்தை சற்று தள்ளிவைக்க வேண்டும். புதிய கடன்களை வாங்காமல் இருக்கவேண்டும்.
தற்போது நிழல் கிரகமான ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11-ல் துலா வீட்டில் சனி பகவானுடன் இணைந்துள்ளார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும் ஆனந்தமும் கூடும். 21-6-2014-ல் ராகு பகவான் உங்கள் ராசிக்கு 10-ல் கன்னி வீட்டில் சென்றமர்வார். இது சிறப்பான இடமில்லை. இங்கிருந்துகொண்டு ராகு பகவான் மற்றவர்களின் பொல்லாப்புக்கு உங்களை ஆளாகச் செய்வார். பெண்கள் வகையில் தொல்லையும் ஏற்படலாம்.
அதேநேரம் அவர் உங்கள் தொழில் வளர்ச்சியைக் கூடச்செய்வார். 10-ல் ராகு உள்ள இந்த காலகட்டத்தில் பூமி, பொருள், அழியாச் செல்வம் வரும். இல்லையென்ற நிலை ஜய வருடத்தில் உங்களுக்கு வராது. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். தீயவர்கள் விலகிச்செல்வார்கள். வீட்டிற்கு பயன் தராமலிருந்த உங்கள் பிள்ளைகள் இனி உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். மனைவி வழியில் தொல்லைகொடுத்துவந்த உறவுகள் விலகிச்செல்வார்கள். ராகு 10-ல் உள்ள இந்த காலகட்டத்தில் இயந்திரங்களைக் கையாள்வோர் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். அதன்மூலம் வரக்கூடிய விபத்துகளைத் தவிர்க்கலாம். வயல்வெளி, காட்டுப் பகுதியில் வேலை செய்பவர்களும், மற்றவர்களும் பாம்புகளால் ஆபத்து வராதபடி நீங்கள்தான் ஒதுங்கிக்கொள்ள வேண்டும். தனுசு ராசியில் பிறந்துள்ள அனைவரும் சர்ப்பதோஷப் பரிகாரம் செய்துகொள்ள வேண்டும்.
அப்படி செய்தால் உங்களுக்குப் பொருளாதார உயர்வும், தொழில் முன்னேற்றமும் ஏற்படும். எவ்வளவுதான் முன்னேற்றங்கள் உங்களுக்கு ஏற்பட்டாலும், ஏதாவது ஒரு கவலை தொற்றிக்கொள்ளும். புதியவர்களைத் தொழில்கூட்டாளிகளாகச் சேர்க்கும்போது, அவர்கள் ஜாதகத்தை ஆராய்ந்து சேர்க்கவேண்டும். மறைமுக வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். குடும்பத்தில் பிள்ளைகளின் தேவைகள் அனைத்தும் கைகூடும். காதல் திருமணம் கைவிட்டுப்போகும். பெற்றவர்கள் ஏற்பாடு செய்யும் திருமணங்கள் கைகூடும்.
20-6-2014 வரை இன்னொரு நிழல் கிரகமான கேது பகவான் 5-ஆம் வீட்டில் இருப்பார். இது சிறப்பான இடமல்ல. இதனால் எதிரிகளின் தொல்லை வரும். உடல்நலம் லேசாக பாதிக்கப்படும். அதிலும் பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவைப்படும். 21-6-2014-ல் கேது பகவான் உங்கள் ராசிக்கு 4-ஆம் இடமான மீனத்திற்குச் செல்வார். இப்போது எல்லாமே நன்மையாக அமையும். ஆனால் உங்கள் கூட்டாளிகள், நண்பர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டும். உங்களின் சேர்க்கை, சகவாசம் உங்களைக் கெடுக்கும். நல்ல நண்பர்களிடம்கூட கவனமாகப் பழகவேண்டும். கேது 4-ல் உள்ளபோது ஆள்பலமறிந்து, அவரின் தன்மையறிந்து பழகவேண்டும். அவர்களின் உண்மைசொரூபம் தெரிந்து பழகினால் ஆனந்தமாய் காலம்கழிக்கலாம். ஒருசிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வந்துநீங்கும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவேண்டும்.
4-ஆம் இடம் என்பது தாய்வழி உறவுகளைப் பற்றி அறிய உதவும் இடம். இதுவரை நீங்கள் பெருமையாக நினைத்த தாய்வழி உறவுகள் இப்போது கெடுதலாகத் தோன்றும். உங்கள் செயல்பாடுகளில் இனி சாந்தமான குணத்தைக் காணலாம். வீடு, மனை விருத்திகள் ஏற்படும். குடும்பத்திலும் சுற்றத்திலும் இருந்துவந்த கசப்புணர்வுகள் நீங்கும். விரயங்கள் அனைத்தும் சுபவிரயச் செலவுகளாக மாறும். உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.
பொதுவாக கேது பகவான் கீர்த்திகளைத் தருவார் என்றாலும், தாய்வழி உறவுகளோடு பகையை உண்டாக்கப் பார்ப்பார். எனவே நீங்கள் முடிந்த அளவு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் ஆலயம் சென்று வழிபட்டு வரவேண்டும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு, விரும்பிய இடத்துக்கு மாறுதல் வரும். ஒருசிலர் பதவி உயர்வோடு மாறுதலில் செல்வார்கள். கேது பகவான் கெடுக்கமாட்டார். நல்ல அனுபவங்களைப் பெறச்செய்வார். அது நமக்கு வழிகாட்டுதலாக இருக்கும்.
சொத்துகள் வாங்கும்போது குடும்ப உறவினர்கள் ஜாதகத்தைப் பார்த்து வாங்கவேண்டும். ஒருசிலர் தாயாரின் உடல்நிலையில் சற்று கவனம் கொள்ளவேண்டும்.
பெண்கள்
உங்களுக்கு ஆண்டின் ஆரம்பத்தில் பணத்திற்கு எந்தக் குறையும் இல்லை. பின்னாளில் சிறிது சிரமம் உள்ளது. நகை வாங்கும் திட்டத்தை ஆண்டின் முற்பகுதியில் முடித்துவிடவேண்டும். திருமணம் ஆகாதவர்களுக்கு 13-6-2014-க்குள் திருமணம் முடிவுக்கு வரும். உடன்பிறந்தோரிடையே இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள்.
மாணவர்கள்
இந்த கல்வியாண்டில் 13-6-2014-க்குள் நடைபெறும் தேர்வுகளில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். அதன்பிறகு கடுமையாகப் படிக்கவேண்டும். அடுத்த கல்வியாண்டில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே மெரிட்டில் பாஸ் செய்யமுடியும்.
தொழிலதிபர்கள்- வியாபாரிகள்
தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். அனுகூலமான போக்கு காணப்படும். புதிய தொழில் தொடங்கலாம். அரசிடமிருந்து எதிர்பார்த்த உதவித் தொகை 13-6-2014-க்குள் கிடைக்கும். ஒருசிலர் தீய நண்பர்களின் சேர்க்கைக்கு ஆளாகி அவதியடைய வாய்ப்புகள் அதிகமுள்ளது. எனவே இனம்தெரியாத நபர்களை நம்பவேண்டாம். அவர்களிடம் பண விஷயத்தில் எந்தத் தொடர்பும் கூடாது.
விவசாயிகள்
விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். விவசாயத்தில் வளர்ச்சி காண்பார்கள். முதல் ஆறு மாதங்களில் புதிய நிலம், நவீன விவசாயக் கருவிகள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். பணப்பயிர்களைப் பயிரிடுவோர் யோசித்துச் செய்யவேண்டும். அதிக முதலீடு செய்யாமல் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம்.
அரசுப் பணியாளர்கள்
இந்த ஜய வருடத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம். ஆர்வமாகப் பணிசெய்யும் சுபாவம் உருவாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாறுதலைப் பெறலாம். இந்த அனைத்து நன்மைகளும் 12-6-2014 வரை நடைபெறும். வேலையின்றி இருப்பவர்களுக்கு அதற்குள் வேலைகிடைக்க வாய்ப்புண்டு. 13-6-2014 முதல் பார்க்கும் வேலையில் அதிக பளு உண்டாகும். ஒருசிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். 17-7-2014 முதல் காவல்துறை, ராணுவம் தொடர்பான பணியில் இருப்பவர்கள் தங்கள் பணியில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தற்காலிகப் பணிநீக்கத்தில் உள்ளவர்கள் மீண்டும் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள்.
கலைத்துறையினர்
புதிய வாய்ப்புகள் வந்துசேரும். 13-6-2014-க்குப் பிறகு முயற்சியின்பேரில் மட்டும் வாய்ப்புகள் வரும். பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சேமிப்பு உங்களுக்கு கைகொடுக்கும்.
அரசியல் பிரமுகர்கள்
12-6-2014 வரையிலும் அரசியல்வாதிகளுக்கு நன்மைகள் கூடும். எதிர்பார்த்த புதிய பதவிகள் வந்துசேரும். உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். இந்த ஆண்டு எம்.பி. தேர்தலில் சீட் கிடைப்பவர்கள் வெற்றியைக் காண்பார்கள். ஒருசிலர் அமைச்சர் பொறுப்பையும் அடைவார்கள்.
70% நன்மை
இந்த ஆண்டு தனுசு ராசி அன்பர்கள் 70 சதவிகித நன்மையை அடைவார்கள். 8 பங்கு லாபம் பெறுவீர்கள். 2 பங்கு விரயம் ஏற்படும். ஆரோக்கியம் 3 பங்கு, அவஆரோக்கியம் 2 பங்கு, ராஜபூஜிதம் 8 பங்கு, ராஜயோகம் 6 பங்கு, சுகம் 3 பங்கு, துக்கம் 3 பங்கு உள்ளது. எனவே இந்த ஆண்டில் தேர்தலில் நிற்கும் அரசியல் பிரமுகர்கள் வெற்றிபெறுவார்கள்.
மூல நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை சீரான வருமானம் இருக்கும். எனவே நீங்கள் எப்போதும்போல பொருளாதார நெருக்கடி இல்லாமல் வாழ் வீர்கள்.
ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானம் சீராகவே இருக்கும். செய்யும் காரியங்கள் அனைத்திலும் நல்ல பலன்களே உருவாகும். சேமிப்பை உயர்த்திக் கொள்வீர்கள். காலத்தே செய்யும் அனைத்து காரியத்திலும் வெற்றியைக் காண்பீர்கள்.
மார்கழி முதல் பங்குனி வரை உதிரி வருமானமும், எப்போதுமுள்ள வருமானமும் வரும். இப்போது நீங்கள் மனச்சோர்வில்லாமல் அனைத்து காரியங்களையும் செய்வீர்கள். சேமிப்பு கூடுதலாகும். சௌபாக்கியம் ஏற்படும். தனலாபம் ஏற்படும். எதிர்காலம் யோகம் தரும்.
பூராடம் மற்றும் உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை கூடுதலான லாபத்தையும், உதிரி வருமானங்களையும் பெறுவீர்கள். சேமிப்பை உயர்த்திக் கொள்ளவேண்டும். பின்னாளில் அது உங்களுக்குக் கைகொடுக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். வருமானம் சீராகும்.
ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானம் குறைவாக உள்ளது. எனவே நீங்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கூடுதல் செலவுகளைத் தவிர்க்கவேண்டும். புதிய கடன்களை வாங்காமல் தள்ளிப்போட வேண்டும்.
மார்கழி முதல் பங்குனி வரை சீரான வருமானம் உள்ளது. அநாவசிய செலவுகள் வராது. ஒருசிலருக்கு தூரதேசப் பயணம் கைகொடுக்கும். சௌபாக்கியம் உண்டு. தனலாபம் கிடைக்கும். எதிர்கால யோகமும் உண்டு.
ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிடப் பரிகாரம்
சனிக்கிழமைகளில் ஆஞ்சனேயருக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட வேண்டும். அல்லது ஞாயிற்றுக்கிழமையில் ஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கிவர, நன்மையுண்டு. அல்லது இந்த ஆண்டு முழுவதும் ஒவ்வொரு தினமும், நெற்றியில் குங்குமம் இட்டுக்கொண்டு வெளியில் செல்லுங்கள். காரிய வெற்றிகள் குவியும்.அல்லது தினசரி வீட்டில் சாமி படத்துக்குக்கீழ் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு வெளியில் செல்லுங்கள். பெரிய வெற்றிகள் ஏற்படும்.