
எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காமல் போயிருக்கும். குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்திருக்கலாம். சிலர் நண்பர்களால் அதிக சிரமத்தை அடைந்திருப்பார்கள். ஆனால் குரு பகவான் தன் சொந்த வீட்டைப் பார்த்ததால் சிறிதளவு சிரமம் குறைந்திருக்கும். கிரகங்களில் அதிகமான பலமுள்ள சனி பகவான் உங்கள் ராசிக்கு 7-ல் (துலாம் வீட்டில்) 16-12-2014 வரையிலும் உள்ளார். கண்டச் சனி நடக்கும் இந்தக் காலகட்டத்தில், நீங்கள் வாகனங்களில் கவனத்துடன் செல்லவேண்டும். சிலர் வட்டிக்குப் பணம் வாங்கி அவஸ்தைப்படலாம். எனவே எதிலும் நிதானித்துச் செல்லவேண்டும்.
சகோதர வகையில் பிரச்னைகள் இருந்தால் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் மனத்தாங்கல் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது எதுவாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யுங்கள். ஜூன் 12 வரை உங்கள் யோகாதிபதியான குருபகவான் 3ம் வீட்டில் முடங்கிக் கிடப்பதனால் காரியத் தடைகளும், உறவினர், நண்பர் பகையும் வந்துபோகும். இளைய சகோதர வகையில் செலவுகளும், பிரிவுகளும் வந்து நீங்கும். ஜூன் 13ந் தேதி முதல் குரு 4ம் வீட்டில் சென்று அமர்வதால் ஓரளவு பணவரவு அதிகரிக்கும்.
பங்குச் சந்தையில் பணம் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். பேருந்து, புகை வண்டியில் படிகட்டுப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. சாலைகளை கடக்கும்போதும் அவசரம் வேண்டாம். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை தாமதமின்றி செலுத்தப் பாருங்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் மனைவி வழியில் உதவிகள் உண்டு. வெளிவட்டாரத்தில் புகழடைவீர்கள்.
சனி பகவான் ஜய வருடப் பிறப்பிற்கு முன்னரே மார்ச் 4 முதல், ஜய வருடத்தில் ஜூலை 19 வரை வக்ரம் அடைகிறார். அவர் வக்ரமாக உள்ள அந்த காலகட்டத்தில் கெடுபலன் தருவதை நிறுத்திக்கொள்வார். நல்ல பலன்களே நடக்கும். அதன்பிறகு கண்டச்சனியின் தாக்கம் உண்டு என்றாலும், கெடுதல் எதுவும் வராது. கொடுக்கல்- வாங்கல் தொழில் செய்கின்றவர்கள் நிதானித்துச் செயல்பட வேண்டும்.
உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். உத்யோகம், உயர் கல்வியின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டியிருக்கும்.
ஜூன் 20ந் தேதி வரை கேது உங்கள் ராசியிலேயே நீடிப்பதால் தனக்கு ஏதோ பெரிய நோய் இருப்பதைப்போல பிரமை வந்து நீங்கும். முன்கோபம் அதிகமாகும். உணர்ச்சி வேகத்தில் பேசாமல் நிதானத்தை கடைப்பிடிக்கவும். உறவினர்களிடம் எல்லா விஷயங்களிலும் தலையிடும் அளவுக்கு அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். ஜூன் 21ந் தேதி முதல் உங்கள் ராசியை விட்டு கேதுபகவான் விலகுவதால் மனச் சலனங்கள், படபடப்பு, டென்ஷன் போன்றவை குறையும்.
ஆரோக்யமும் அழகும் கூடும். இதமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். தோல் நோய், தலைவலி விலகும். புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். கௌரவப் பதவிகள் தேடிவரும். டிசம்பர் 15 வரை கண்டகச் சனி நடைபெறுவதாலும், ஜூன் 20 வரை ராகு-சனியுடன் சம்பந்தப்பட்டிருப்பதாலும் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அறுவை சிகிச்சை வந்துபோகும். வீண் சந்தேகங்களாலும், ஈகோ பிரச்னையாலும் பிரியும் நிலைக்கு சிலர் தள்ளப்படுவீர்கள். சின்னச் சின்ன பிரச்னைகளை பெரிதாக்காமலும், பழைய பிரச்னைகளை பேசாமலும் இருப்பது நல்லது.
இந்த ஜய வருடத்தில் சாயா கிகரகமான ராகு பகவான் உங்கள் ராசிக்கு 7-ல் (துலாம் வீட்டில்) உள்ளார். அவர் 21-6-2014-ல் கன்னி ராசிக்கு- உங்கள் ராசிக்கு 6-ல் வருகிறார். அதேபோல கேது பகவான் 21-6-2014-ல் உங்கள் ராசிக்கு 12-ல் (மீன வீட்டிற்கு) வருகிறார். மீன வீட்டிற்குச் செல்லும் அவரால், மேஷ வீட்டில் கேது இருக்கும்போது ஏற்பட்ட சிரமம் வராது. அதேநேரம் உடல்நலன் பாதிக்கப்படும். பித்தம் சம்பந்தமான நோய்த் தாக்கம் வரலாம். எனவே உடல்நலனில் மிகுந்த அக்கறை கொள்ளவேண்டும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். எப்போதும் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தினருடன் தெய்வீக சுற்றுலா அதிகமிருக்கும்.
14-4-2014 முதல் 12-6-2014 வரை குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகம் ஏற்படும். உடன்பிறப்புகளால் சொத்துப் பிரச்சினை உண்டாகும். எதிர்பாராத வகையில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். ஒருசிலருக்கு சொத்து வாங்கி, அதனால் வில்லங்கம் உண்டாகலாம். இதனால் மனநிம்மதிக் குறைவு ஏற்படும். ஒருசிலரின் மனைவிக்கு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சையும் உண்டாகலாம். எனவே எதிலும் நிதானித்து சிந்தித்துச் செயல்படவேண்டும்.
13-6-2014 முதல் 2-12-2014 வரை பிள்ளைகள்மீது கவனம் செலுத்தவேண்டும். அவர்கள் கல்வி விஷயத்தில் தடைகளும், அதிகமான செலவும் ஏற்படும். அதனால் புதிய கடன்கள் ஏற்படக்கூடும். எனவே எதிலும் நிதானத்துடன் செயல்படவேண்டும். எந்த ஒரு காரியத்திலும் பாதுகாப்புடன் செயல்பட்டால் நல்ல பலன்களை அடையலாம்.
3-12-2014 முதல் 21-12-2014 வரையில் லாபங்கள் அதிகமாகும். 22-12-2014 முதல் எதிலும் நிதானித்துச் செயல்படவேண்டும். பழைய பாக்கிகள் தொந்தரவு கொடுக்கும். எனவே கடனைத் திரும்பச் செலுத்தவிட்டு, புதிய கடன் பெறாமல் இருப்பது உத்தமம். இந்த நிலை 31-1-2015 வரை நீடிக்கும். பின்பு நல்ல பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். வேலையில்லாத பிள்ளைகள் புதிய வேலைவாய்ப்பைப் பெறுவார்கள்.
1-2-2015 முதல் 13-4-2015 வரையிலும் உங்களுக்கு யோக காலம். புதிய பொருளாதார வாய்ப்புகள் வந்துசேரும். பொருளாதாரம் உயரும். பெரும்பகுதி எல்லா முயற்சியிலும் வெற்றியைக் காண்பீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உறவினர்களால் நன்மையுண்டு. நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உங்களை ஏமாற்றுகின்றவர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேலைப் பளு கூடும். தூரதேசத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். ஒருசிலருக்கு மத்திய, மாநில அரசுகளில் வேலைவாய்ப்பு கிட்டும்.
பெண்கள்
குடும்பத்திலுள்ள அனைவருக்கும் பிடித்தமானவர்களாகத் திகழ்வீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சிகண்டு பெருமை கொள்வீர்கள். விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களிடையே உங்கள் செல்வாக்கு கூடும். திருமணமாகாத பெண்களுக்குத் திருமண யோகம் வந்துசேரும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
மாணவர்கள்
இந்த ஸ்ரீஜய ஆண்டில்- கல்வியாண்டில் மாணவர்கள் நன்கு படித்து நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். விளையாட்டு, கலைத்துறையிலும் ஆர்வம் கொள்வார்கள். படிப்பு முடிந்தவர்களுக்கு, தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிட்டும்.
தொழிலதிபர்கள்- வியாபாரிகள்
ஆண்டு தொடக்கத்தில் செவ்வாய் பகவானாலும், பிற்பகுதியில் ராகு பகவானாலும் நல்ல பொருளாதார வளம் இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் லாபம் காண்பீர்கள். புதிய தொழில் தொடங்க தொழிலாளர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலை விரிவுபடுத்த போட்ட திட்டம் நிறைவேறும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சீராகக் கிட்டும்.
விவசாயிகள்
விவசாயிகள் இந்த ஆண்டு நல்ல மகசூலைப் பெறுவார்கள். ஒருசில விவசாயிகள் ஜூன் 2014-க்குள் புதிய வீடு கட்டுவார்கள். அல்லது நிலம் வாங்குவார்கள். பணப்பயிர்கள் பயிரிடுவோர் யோசித்துச் செய்யவேண்டும். குறைந்த முதலீட்டில் பயிர் செய்து அதிக லாபம் பெறலாம்.
அரசுப் பணியாளர்கள்
அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் நல்ல ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிட்டும். சந்திரமங்கள யோகமுள்ள இந்த காலத்தில், புதிய வீடு கட்ட போட்ட திட்டம் நிறைவேறும். காவல் துறையில் பணிபுரிபவர்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதல் பெறுவார்கள். ஒருசிலர் தானாக முன்வந்து ஓய்வுபெற்று புதிய தொழிலைத் தொடங்கி அதிக லாபத்தைப் பெறுவார்கள்.
கலைத்துறையினர்
குறைந்த பட்ஜெட் படம் எடுப்பவர்கள் அதிகமான லாபத்தைக் காண்பார்கள். சக ஊழியர்களிடம் மிகவும் எச்சரிக்கையுடன் பழகவேண்டும். கலைத்துறையினருக்கு இந்த ஆண்டின் முற்பகுதியில் பாராட்டும் பரிசும் கிடைக்கும். இந்த ஆண்டு வளமான ஆண்டாக அமையும்.
அரசியல் பிரமுகர்கள்
அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் தங்கள் சுய ஜாதகத்தை நடப்பு தசா புக்தியுடன் பரிசீலித்து அதற்கேற்றவாறு செயல்படவேண்டும். தலைமையின் ஆதரவுபெற உங்கள் ஜாதகத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருசிலருக்கு அமைச்சர் பொறுப்புகள் தேடிவரும். மக்கள் செல்வாக்கும் கிட்டும்.
80% நன்மை
ஆதாயம் 5 பங்கு, விரயம் 11 பங்கு, ஆரோக்கியம் 5 பங்கு, அவஆரோக்கியம் 1 பங்கு, ராஜபூஜிதம் 6 பங்கு, சுகஸ்தானம் 4 பங்கு, துக்கம் 3 பங்கு என அமைகிறது. நோயின் தாக்கம் விலகும். அரசு ஊழியர்கள் பதவி உயர்வையும், அரசியல் பிரமுகர்கள் நல்ல பதவியையும் அடைவார்கள். எச்சரிக்கையுடன் செயல்பட்டு வந்தால் பின்னாளில் அதிக லாபத்தைப்பெற்று வாழ்வீர்கள்.
அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை மாதம்முதல் ஆடி மாதம்வரை ஐந்து பங்கு லாபம் வருகிறது. கூடுதல் வருவாய் வரும். எனவே சொத்து வாங்க, பொருட்கள் வாங்க உத்தமம். காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.
ஆவணி முதல் கார்த்திகை வரையில் இரண்டு பங்கு லாபமுண்டு. கடன் வாங்கும் நிலை ஏற்படாது. வருமானம் சீராக இருக்கும்.
மார்கழி முதல் பங்குனி வரை இரண்டு பங்கு லாபமுண்டு. வருமானக் குறைவு ஏற்படாது.
பரணி நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை ஏழு பங்கு லாபம் வருகிறது. காரிய வெற்றிகள் உண்டு. சிக்கனமாக இருந்தால், அது அடுத்த நான்கு மாதங்களுக்கு உங்களுக்கு கைகொடுக்கும். திட்டமிட்ட காரியமும், திட்டமிடாத காரியமும் எளிதாய் நிறைவேறும். ஆவணி முதல் கார்த்திகை வரை எதிர்பார்த்த அளவு வருமானம் வரவில்லை. எனவே நீங்கள் சிக்கனத்துடன் செயல்படவேண்டும். புதிய கடன்கள் வாங்கவேண்டியது வராது.
மார்கழி முதல் பங்குனி வரை இரண்டு பங்கு லாபம் வருகின்றது. எனவே அலைச்சல் குறைந்து, காரிய வெற்றிகள் ஏற்படும்.
கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை இரண்டு பங்கு லாபத்தைப் பெறுவார்கள். வருமானம் சீராக வரும். கஷ்ட ஜீவனம் வராது. சேமிப்பை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
ஆவணி முதல் கார்த்திகை வரை ஒரு பங்கு லாபம் வருகின்றது. நிம்மதியான காலகட்டம். மார்கழி முதல் பங்குனி வரை வருமானக் குறைவு உள்ளது. காரிய பங்கமும் அலைச்சலும் ஏற்படும். எனவே எதிலும் நிதானித்துச் செயல்பட வேண்டும்.
ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிடப் பரிகாரம்
சஷ்டி திதிகளில் அருகிலுள்ள முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம், சந்தனக் காப்பு செய்யலாம். முடியாதவர்கள் உடல் ஊனமுள்ளவர்களுக்கு ஆடை தானம் செய்யலாம்; அன்னதானம் செய்யலாம். மேற்கண்ட பரிகாரங்களைச் செய்து ஸ்ரீஜய வருடத்தில் வளமாக வாழலாம்.