
கடகம்: புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)
இந்த ஸ்ரீஜய வருட ஆரம்பத்தில் தடை, தாமதங்களைச் சந்திக்கலாம். அதிகமான அலைச்சல் ஏற்படலாம். எந்த அளவுக்குத் தடை, தாமதங்கள் ஏற்படுகின்றதோ அந்த அளவிற்கு வருடப் பிற்பகுதியில் நல்ல பலன்கள் உண்டாகும். மருத்துவத் தொழில் செய்கிறவர்கள் இந்த ஆண்டு நல்ல பலன்களைப் பெறுவார்கள். மருந்து விற்பனை செய்கின்றவர்களும், மருந்து விற்பனைப் பிரதிநிதியாக இருப்பவர்களும் கூடுதல் லாபத்தையும் சம்பளத்தையும் பெறுவார்கள். கணினி துறையில் உள்ளவர்கள் புதிய படைப்புகளைப் படைப்பார்கள். இவர்களது கண்டுபிடிப்பை மற்றவர்களும் ஏற்றுக்கொள்வார்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். ஒருசிலர் தங்க நகைகளை அடிக்கடி அடகுவைப்பார்கள்.
உங்களின் பாதகாதிபதியான சுக்கிரன் 8ல் மறைந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் இதுவரை கடினமானதாக இருந்த காரியங்களை யெல்லாம் எளிமையாக முடித்துக் காட்டுவீர்கள். புதிய பொறுப்புகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். இந்த ஜய வருடம் உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் பிறப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி வகை பிறக்கும். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தள்ளிப்போன விஷயங்கள் முடியும். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். பழைய சொத்தை விற்று புது வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளால் மதிப்பு கூடும்.
13-6-2014-ல் குரு பகவான் மிதுன ராசியிலிருந்து உங்களின் கடக ராசிக்கு வருகிறார். பழைய ஜோதிடச் சுவடியில் “ராசியில் குரு வந்தால் சிறைப்படுதல் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதுபோன்ற சிறைப்படுதல் நிலை எல்லாருக்கும் வராது. கடக ராசிப் பெண்ணாக இருந்தால், திருமணம் நடைபெற்று கணவன் என்கின்ற வாழ்க்கைச் சிறைக்குள் சென்றுவிடுகிறாள் என்று அறியவேண்டும். ஆண்களுக்கு ராசியில் குரு வரும்போது அடிமைத் தொழில் புரிவார்கள். மேலதிகாரிகளிடம் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்படவேண்டும்; பேசவேண்டும். ஒருசிலருக்கு கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு வலுக்கும்.
பூர்வீக சொத்துகளால் பிரச்சினை ஏற்பட்டு, வழக்குகளை சந்திக்க நேரும். எனவே நீங்கள் உங்கள் உடன்பிறந்தவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாகப் பேசவேண்டும். முடிந்தவரை பேச்சுவார்த்தை மூலம் பாகப் பிரிவினையை சரிசெய்து கொள்ளவேண்டும். ஒருசிலருக்கு அயல்நாடு சென்று அறுவை சிகிச்சை செய்யவேண்டியது வரும். நீங்கள் இப்போது வெளிநாடு செல்ல போட்ட புதிய திட்டத்தை தள்ளி வைக்கவேண்டும்.
குரு பகவான் ஜென்ம ராசியில் அமர்ந்து சிரமத்தைக் கொடுக்கின்ற இந்த வேளையில், சனி பகவான் ஸ்ரீஜய வருடத்தில் எந்தமாதிரியான பலன்களைத் தரவுள்ளார் என்பதைக் காண்போம். 16-12-2014 வரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 4-ல் அமர்ந்து, அர்த்தாஷ்டமச் சனியாக உள்ளார். அவர் உங்கள் ராசிக்கு 4-ல் உள்ள காலகட்டத்தில், அதிகமான சிரமத்தைக் கொடுக்காமல் நன்மைகளையே செய்வார். 60 வயதுக்கு மேலுள்ள கடக ராசி அன்பர்களுக்கு முழங்கால் பகுதியில் வலி வந்து நீங்கும். உரிய மருத்துவ சிகிச்சை செய்து கொள்ளவேண்டும்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு 4-ல் உள்ளதால் எதிலும் நிதானமாக செயல்படவேண்டும். மிகவும் கருப்பாக உள்ளவர்களால் குடும்பத்தில் கோளும் கலகமும் உண்டாகும். குழந்தை இல்லாத தம்பதியர் ஒருசிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். மாமன்வழி உறவுகள் வலிய சண்டைக்கு வருவார்கள். எனவே நீங்கள் ஒதுங்கியிருக்க வேண்டும். தாய்- தந்தையருக்கு மருத்துவச் செலவுகள் வரலாம். எனவே தக்க நேரத்தில் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். 4-ல் பயணிக்கும் சனி பகவான் கெடுதல்களை மட்டுமே செய்வாரென்று நீங்கள் பயம்கொள்ளக்கூடாது. இக்காலகட்டத்தில் திரைப்படக் கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்கள் அங்குசென்று பொருளீட்டுவார்கள். அரசுப் பதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் அந்தப் பதவியை அடைவார்கள். அரசுப் பணியாளர்களுக்கு அரசாங்கத்திலிருந்து வரவேண்டிய நிலுவை பாக்கிகள் வந்துசேரும்.
உங்கள் குடும்பத்துக்கு வேண்டாதவர்கள் இப்போது உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். வழக்குகளில் ஏற்பட்டுவந்த தாமதம் மாறும்; வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். பொதுவாக எந்த காரியத்திலும் நிதானித்து செயல்படுபவர்கள் கூடுதல் லாபத்தை அடைவார்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் மீண்டும் வந்துசேர்வார்கள். உறவினர்கள்மூலம் காரிய சித்தி ஏற்படும். பணவசதிக்குக் குறைவிருக்காது. எனினும் கூடுதல் செலவுகள் ஏற்படும். வெளியில் புதிய நபர்களிடம் மிகவும் கவனமாகப் பழகவேண்டும். நினைத்தபடி ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். உடன்பிறந்தவர் களுக்கு அல்லது அவர்கள் குடும்பத்தில் நடக்கவேண்டிய சுபகாரியங்கள் நடக்கும். சுற்றத்தார் மத்தியில் நிலவிவந்த பகை மாறும். சனி பகவான் 16-12-2014-ல் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குச் செல்கின்றார்.
பொதுவாக சனி பகவான் ஆறு மாதங்களுக்கு முன்பே தன் பார்வையை விருச்சிக ராசிக்குக் கொண்டுசெல்வார். இந்த காலகட்டத்தில் கடக ராசி அன்பர்கள் நினைத்த காரியம் அனைத்தும் கைகூடும். எல்லா தரப்பு மக்களும் கூடுதல் லாபத்தையும் நல்ல தொழிலையும் பெறுவார்கள். நினைத்தபடி குடும்பத்தில் நிம்மதி பெருகும். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதலில் செல்வார்கள். புதிய வீடுவாங்க போட்ட திட்டம் நிறைவேறும். கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்துசென்ற மனைவி, நீங்கள் அழைக்காமலே உங்கள் வீடு வந்துசேர்வார். கடன் பாக்கிகள் வசூலாகும். பெண்கள் புன்னகையோடும் பொன்னகையோடும் சுபகாரியங்களில் கலந்து கொண்டு உற்சாகமடைவார்கள். உங்களுடன் பிறந்தவர்களுக்குத் திருமணம் நடக்கும்.
21-6-2014-ல் ராகு பகவான் கன்னி ராசிக்கு வருகின்றார். உங்கள் ராசிக்கு 3-ஆம் இடத்துக்கு வரும் ராகு பகவான், எப்போதும் உங்கள் முயற்சிகளில் வெற்றியைத் தருவார். நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். தொழில் வளர்ச்சியும் லாபமும் பெருகும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். எதிர்பார்த்த அளவு லாபம் கிட்டும். வழக்குகள் சாதகமாகும். நல்ல வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். ஒருசிலர் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் நல்ல வேலையாளைப் பெறுவார்கள். ஒருசிலர் பெரிய தொழிற்சாலைகளைத் தொடங்கி, நல்ல தொழிலாளர்களையும் பெற்று பொருளாதாரத்தில் உயர்வார்கள். சேமிப்பு பணம் கரையாமலிருக்க சிந்தித்துச் செயல்படவேண்டும். உடன்பிறந்த சகோதர- சகோதரிகளிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் பொருள்வளம் பெருகும். உங்கள் உயர்வுக்கு இதுவரை இருந்துவந்த போட்டிகள், எதிர்ப்புகள் விலகும். தெளிவான சூழ்நிலைகள் பிறக்கும். செய்யும் காரியத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். அயல்நாட்டு வணிகம், உற்பத்தி அனைத்திலும் கூடுதலான லாபம்கிட்டும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகள் பூர்த்தியாகும். மருத்துவச் செலவுகள் குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை கூடும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் வந்துசேரும். சொத்துகள் வருகின்றதோ இல்லையோ, நீங்கள் மனைவி வழியில் கொடுத்த கடன்கள் வந்துசேரும். மனைவிவழி உறவினர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நண்பர்கள், கூட்டாளிகளால் நீங்கள் செய்துவரும் தொழில் உயரும். வருமானம் இரட்டிப்பாகும். அரசாங்கம், அரசியல்வாதிகளின் ஆதரவால் நீங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் பலிதமாகும்.
கேது பகவான் உங்கள் ராசிக்கு 9-ல் உள்ளார். அவர் இந்த ஆண்டு ஒளிமயமான எதிர்காலத்தை வழங்குவார். ஒருசிலருக்கு 21-6-2014-க்குப் பிறகு நிரந்தரப் பணி அமையும். தடைப்பட்ட வேலைவாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பொன், பொருள் சேமிப்பு உயரும். பூர்வீக சொத்துகளால் லாபம் கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த சொத்துப் பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு வரும். செல்வந்தர்களின் தொடர்பு மேலும் செல்வச் செழிப்பை உயர்த்தும். பெற்றோர் வழியில் எதிர்பார்த்த நல்ல பலன்கள் வந்துசேரும். நண்பர்கள் எப்போதும் உங்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பார்கள். அவர்களால் வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சேமிப்பு நிலையும் உயரும். ஒருசிலர் குலதெய்வ அருளைப் பெறுவார்கள். குலதெய்வக் கோவிலை எடுத்துக்கட்டும் பாக்கியம் சிலருக்குக் கிட்டும். எப்போதும் சந்தோஷம் தரும் செய்திகள் வந்துசேரும்.
உங்களிடம் பெரும் தொகையை வாங்கிக்கொண்டு கொடுக்காமலிருந்தவர்கள், வலியவந்து தொகையைத் திருப்பித்தருவார்கள். தடைப் பட்ட ஆலய தரிசனம் கைகூடும். உங்களைவிட்டுப் பிரிந்துசென்ற சொந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகள் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் நீங்கும். வேலை தேடும் இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்த நிலை மாறும். வயதுவந்த பிள்ளைகள் காதல்வயப்படக் கூடும். பிள்ளைகளின் போக்கை பெற்றோர்கள் கவனித்து வருவது நல்லது.
13-6-2014 முதல் நீங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். வீண்பழி வரும் வாய்ப்புள்ளது. ஒருசிலருக்கு வாகனப் போக்குவரத்தால் விபத்து நேரக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவதால் வீண்விரோதங்கள் உண்டாகும். எனவே சுமுகமான அணுகுமுறை தேவை. பிள்ளைகள் கல்வியில் உயர்வார்கள். ஒருசிலருக்கு மாமியார் வீட்டு சொத்துகள் சேரும். சிலர் விவசாயத்தை நவீன முறையில் செய்து நல்ல லாபமும் அதிக மகசூலும் பெறுவார்கள்.
3-12-2014 முதல் 21-12-2014 வரை யோக காலமாகும். நீண்டகாலமாகத் தடைப்பட்ட திருமணம் தற்போது நடக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தவண்ணமிருக்கும். லாரி, டிராக்டர், இயந்திர வகைகளால் நல்ல லாபத்தை அடைவீர்கள். இப்போது உங்களுக்கு வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும்.
1-1-2015 முதல் 14-1-2015 வரை கடக ராசி அன்பர்கள் எதிலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒருசிலருக்கு வாகன கண்டம் உள்ளது. எனவே நீங்கள் வாகனத்தில் மிகவும் எச்சரிக்கையாகச் செல்லவேண்டும். யாரோ செய்த தவறுக்கு நீங்கள் பழியேற்கும் நிலையுண்டாகும். எனவே இந்த காலகட்டத்தில் வெளியூர் பயணங்களைத் தவிர்த்துக்கொள்வது நல்லது.
பெண்கள்
இந்த ஸ்ரீஜய வருடத்தில் பெண்கள் சுபிட்சமாக வாழ்வார்கள். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தாலும், தம்பதிகள் இருவரும் உடனுக்குடன் விட்டுக்கொடுத்து சுமுகமாக வாழ்வார்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் உயரும். பிள்ளைகள் வழியில் ஆடம்பரச் செலவுகளைச் செய்வீர்கள். இதற்கு உங்கள் சேமிப்பு உதவும். ஆடை, ஆபரணச் சேர்க்கையுண்டு.
மாணவர்கள்
மாணவர்கள் இந்த கல்வியாண்டில் அதிகமான முயற்சியெடுத்துப் படிக்க வேண்டியிருக்கும். அடுத்த கல்வியாண்டு சிறப்பாக அமையும். ஒருசில மாணவர்கள் கலையிலும், விளையாட்டுத் துறையிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். மாணவர்கள், பெற்றோர்கள் விருப்பப்படி நடந்துகொள்வார்கள். படிப்பை முடித்தவர்களுக்கு தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்க விடாமுயற்சி செய்யவேண்டும்.
தொழிலதிபர்கள்- வியாபாரிகள்
தொழிலில் எதிர்வரும் குறுக்கீடுகளை சமாளித்து முன்னேறுவீர்கள். வியாபாரிகள், வாடிக்கையாளர்களின் தேவைகளையறிந்து, அதன்படி பூர்த்தி செய்வீர்கள். உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். தொழி லதிபர்கள் வெளியூர் பயணத்தை ஆதாய நோக்கத்தில் மேற்கொள்வீர்கள். ஒருசிலருக்கு வியாபாரத்தையே ஊர்விட்டு ஊர்மாற்றம் செய்யும் எண்ணம் வரும். எதிரிகளினால் தொல்லைகள் ஏற்படும். 2014 ஜூன் முதல் லாபங்கள் படிப்படியாக உயரும்.
விவசாயிகள்
விவசாயிகள் மாற்றுப் பயிர் சாகுபடியால் நல்ல விளைச்சலைக் காண்பார்கள். உழைப்புக்கேற்ற லாபமும் கிடைக்கப்பெறுவார்கள். இந்த ஆண்டு பழைய கடனில் பெருந்தொகையை அடைத்துவிடுவீர்கள். கால்நடை வளர்ப்பவர்கள் இந்த ஆண்டு நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வழக்கு நிலைகள் சாதகமாகச் செல்லும்.
அரசுப் பணியாளர்கள்
இந்த ஆண்டு உங்களுக்குப் பணிச்சுமை கூடும். அதனால் சோர்வுக்கு ஆளாவீர்கள். இருப்பினும் வழக்கமான ஊதிய உயர்வுகள் கிட்டும். அதிகாரிகளின் குறிப்பறிந்து நடந்து, நல்ல பெயர் பெறுவீர்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். ஜூன் முதல் பணியில் முன்னேற்றம் காண்பீர்கள். ஒருசிலருக்கு திடீர் மாற்றம் வரும். பணிமாற்றம் ஏற்படவும் வாய்ப்புண்டு. போலீஸ், ராணுவம், பாதுகாப்பு தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் இந்த ஆண்டு நல்ல பலனைக் காண்பார்கள்.
கலைத்துறையினர்
புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க அதிகமான சிரமத்தை மேற்கொள்ள வேண்டியது இருக்கும். சக கலைஞர்களுடன் நட்புடன் பழகுவீர்கள். வெளியூர், வெளிநாட்டுப் பயணத்தால் நல்ல அனுபவத்தைக் காண்பீர்கள்.
அரசியல் பிரமுகர்கள்
எப்போதும் உங்களுக்கு எதிராகச் செயல்பட்டுவந்த அரசியல் தொண்டர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். நீங்கள் செய்த பொது சேவைக்கு. தலைமையால் பாராட்டப்படுவீர்கள். பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை ஒருசிலர் பெற்று, வெற்றியும் பெறுவார்கள்.
70% நன்மை
ஆதாயம் 2 பங்கு, விரயம் 8 பங்கு. எனவே சேமிப்பைப் பார்த்து, சிக்கனமாக செலவு செய்யவேண்டும். ஆரோக்கியம் 1 பங்கு, அவஆரோக்கியம் 2 பங்கு. உணவில் மிகவும் கட்டுப்பாடு தேவை. ராஜபூஜிதம் 6 பங்கு. வேலை தேடுவோருக்கு அரசப் பணி கிட்டும். ராஜயோகம் 3 பங்கு. சுகம் 3 பங்கு. துக்கம் 3 பங்கு. செல்வாக்கு கூடும். இன்ப- துன்பம் சமமாக இருக்கும்.
(புனர்பூச நட்சத்திரப் பலன், மிதுன ராசிபலனின் இறுதியில் உள்ளது.)
பூச நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை 1 முதல் ஆடி மாதம் வரை சௌபாக்கியத்தோடும் தனலாபத்தோடும் எதிர்கால யோகத்தோடும் வாழ்வார்கள்.
ஆவணி முதல் கார்த்திகை வரையில் வருமானம் எதிர்பார்த்தபடி இருக்காது. எனவே நீங்கள் தேவையற்ற செலவுகளைக் குறைக்கவேண்டும். புதிதாக கடன் வாங்குவதைத் தவிர்க்கவேண்டும். யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது.
மார்கழி முதல் பங்குனி வரை காரிய பங்கம் ஏற்படக்கூடும் எனவே அவசர முடிவுகளைத் தவிர்க்கவேண்டும். அதிகமான அலைச்சல் வரலாம். எனவே புதிய காரியங்களைச் செய்தல் கூடாது. வருமானம் ஓரளவுக்கு வரும். சேமிப்பு உங்களுக்குக் கைகொடுக்கும்.
ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை நான்கு பங்கு லாபம் வருகின்றது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வேண்டிய ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். ஒருசிலர் வீடு வாங்குவார்கள்.
ஆவணி முதல் கார்த்திகை வரை ஒரு பங்கு லாபம் வருகின்றது. இப்போது நீங்கள் தேவையான- அவசியமான செலவுகளை மட்டுமே செய்யவேண்டும்.
மார்கழி முதல் பங்குனி வரை மூன்று பங்கு லாபமுண்டு. பொருளாதார நிலை உயரும். தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கிச்சேர்ப்பீர்கள்.
ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிடப் பரிகாரம்
தேய்பிறை அஷ்டமி திதியில் கால பைரவருக்கு வெண்பூசணிக்காயில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவரவேண்டும். தினசரி சூர்ய நமஸ்காரம் செய்யவேண்டும்.இவற்றைச் செய்யமுடியாதவர்கள் தேய்பிறை அஷ்டமி திதியில், உங்கள் பகுதியிலுள்ள நாய்க்கு வெண்பூசணிக்காயில் சாம்பார் சாதம் வைத்துப் போட்டு வர, தீமைகள் குறையும்.