Wednesday, April 9, 2014

2014 தமிழ் ஜய வருட பலன்கள்-சிம்மம்

5-simma-rasi 
சிம்மம்:     மகம், பூரம், உத்ரம் 1-ம் பாதம் வரை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு…….)

ஸ்ரீவிஜய வருடத்தில் பல கிரகங்கள் சாதகமாக இருந்ததால் பல்வேறு நற்பலன்களைப் பெற்றிருப்பீர்கள். இந்த ஜய ஆண்டிலும் உங்களுக்கு தொடர்ந்து நன்மைகள் கிடைக்கும். பொதுவாக ஒவ்வொரு ராசியிலும் நவகிரகங்களின் பலனை நாம் கண்டாலும், பலன் தரும் கிரகங்களில் முக்கிய பங்கு வகிப்பது குரு பகவான், சனி பகவான், ராகு- கேது பகவான்கள் ஆவார்கள்.

 

உங்கள் இராசிக்கு 12-க்குரிவன சந்திரன் இரண்டாமிடத்தில் உள்ளார். தனஸ்தானத்தில், சுகாதிபதியோடு இணைந்து, மகத்தான யோகத்தை கொடுக்கப்போகிறான். உங்கள் வாக்கு பலிதமாகும். அதனால் செல்வாக்கு உயரும். 7-ல் சுக்கிரன். திருமணம் செய்து வைப்பார். உங்கள் ஜென்மாதிபதி சூரியன் 9-ம் இடமான பாக்கியத்தில் அமர்ந்ததால், கடல் கடந்து போகும் பாக்கியம் கிட்டும். அதனால் ஆதாயமும் உண்டு. வெளிநாட்டில் வேலை வாய்ப்பும் அமையும். சொத்துக்கள் தேடி வரும். வழக்கு இருப்பின் மகத்தான வெற்றி பெறும். காரணம், 8-ம் இடத்தில் புதன் இருப்பதால், சத்ரு ஜெயம் உண்டாகும். 10-ல் கேது உள்ளார். தெய்வ தரிசனம், ஆலய வழிபாடு அதிகம் இருக்கும். லாபத்தில் குரு. தொழில், உத்தியோகம் சிரமமின்றி நடக்கும்.
 
குரு பகவான் 13-6-2014 வரையிலும் உங்கள் ராசிக்கு 11-ல் இருப்பார். அதாவது மிதுன வீட்டில் இருப்பார். இந்த இடம் உங்களுக்கு லாப ஸ்தானமாகும். எனவே நீங்கள் 13-6-2014 வரை நல்ல பலன்களை அடைவீர்கள். குரு பகவான் அதிகமான நன்மைகளைத் தருவார். வேலை தேடுவோர் நல்ல வேலை கிடைத்து கூடுதல் சம்பளத்தில் அமர்வார்கள். வேலையில்லையே என்ற பிரச்சினை முடிவுக்கு வரும். இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். இதற்கு முன்னர் உங்களுக்கு இருந்துவந்த ஞாபக மறதி, அலைச்சல், நிம்மதியில்லாமை போன்ற பிரச்சினைகள் நீங்கும். தொழில் செய்பவர்களும், வணிகம் செய்பவர்களும் மிகவும் விழிப்பாகச் செயல்படவேண்டும். பணப்பிரச்சினைகளை நீங்களே கண்காணிப்பது நல்லது.
புதிய முயற்சிகள் யாவும் சிறப்பு தரும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். உடன்பிறந்தவர்கள் மத்தியில் இருந்துவந்த பிணக்குகள் நீங்கும். திருமணமாகி நீண்டகாலம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். திருமண முறிவு ஏற்பட்டுள்ள ஒருசிலர் மறுமணம் செய்துகொள்வார்கள். நற்குணங்கள் நிரம்பப்பெற்ற நல்ல பெண் வருவார். பொருளாதார வளம் மேம்படும். ஒருசிலருக்கு உத்தியோகம் சிறப்படைந்து நல்ல பதவி கிடைக்கும்.
சொத்து சம்பந்தமான வழக்குகள் சாதகமாகும். சகோதரர்கள் ஒற்றுமை நீடிக்கும். பெற்றோர்கள் மத்தியில் பிள்ளைகளின் மரியாதை கூடும். விலகிச் சென்ற பிள்ளைகள் மீண்டும் வந்துசேர்வார்கள். நீண்டகாலமாக வெளிநாட்டில் வாழ்ந்துவரும் பிள்ளைகளில் சிலர் இப்போது தங்கள் தாய்- தந்தையரைக் காணவருவார்கள். சகோதரிகள் தங்கள் உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வார்கள்.
குரு பகவான் 13-6-2014 முதல் உங்கள் ராசிக்கு 12-ல் வருகிறார். அவர் 12-ல் வருவது சிறப்பில்லை என்றாலும் அதிகமான இடர்ப்பாடுகளைத் தரமாட்டார். இந்த காலகட்டத்தில் நீங்கள் வியாழன்தோறும் குரு பகவானை தரிசித்துவருவது உத்தமம். குரு 12-ல் இருக்கும்போது எச்சரிக்கையுடன் செயல்பட்டால் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். செய்யும் வியாபாரத்தில் எப்போதும் விழிப்பாக இருக்கவேண்டும். தொழிலாளர்களின் போக்கில் தவறுகள் காணப்பட்டாலும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் மென்மையான போக்கைக் கடைப்பிடித்தால் அவர்களின் முழு ஒத்துழைப்பையும் பெறலாம். கூட்டு வியாபாரம் செய்கிறவர்களிடையே கருத்து வேறுபாடுகள் வரும். எனவே கணக்கு கேட்பதிலும், பார்ப்பதிலும் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். குரு 12-ல் வரும் இந்த நேரத்தில் சிம்ம ராசியில் பிறந்த அன்பர்கள் வாகனத்தை மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் ஓட்டவேண்டும்.
“”குடி குடியைக் கெடுக்கும்’ என்பது இதுவரை சிலருக்குப் புரியாமல் இருந்துவந்திருக்கும். அந்த குடிப்பழக்கத்தால் இப்போது சிலர் இதய அறுவை சிகிச்சை செய்யவேண்டியது நேரலாம். மருத்துவச் செலவுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்யம்படி ஆகலாம். பதவியில் உள்ள பணியாளர்கள் அதிகாரிகளின் வைராக்கியத்துக்கு ஆளாக நேரலாம். ஒருசில அரசு ஊழியர்கள் தற்காலிகப் பணிநீக்கத்தை சந்திக்க நேரலாம். கடன் தொந்தரவுக்காக ஒருசிலர் பூர்வீக சொத்துகளை விற்கவேண்டிய நிலை வரும். 12-ஆம் இடமான கடகத்தில் குரு பகவான் உலாவரும்போது, அவரால் நன்மை தர இயலாது. அலைச்சலும் பொருள் விரயமும் தவிர்க்கமுடியாது.
இனம்புரியாத மன உளைச்சல் உண்டாகும். கடகத்தில் உச்சம்பெறும் குருவின் 5, 7, 9-ஆம் பார்வை பலத்தால் ஓரளவு நன்மை உண்டாகும். 5-ஆம் பார்வையால் குழந்தைகளால் நன்மை உண்டாகும். சுபகாரியத்தில் இருந்துவந்த தடை நீங்கும். குருவின் 7-ஆம் பார்வையால் கணவன்- மனைவி ஒற்றுமை மேலோங்கும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். குரு பகவான் 9-ஆம் பார்வையாகத் தன் சொந்தவீட்டைப் பார்ப்பதால் பால் பாக்கியம் பெருகும். தந்தை சொத்தின் மூலம் வருகின்ற வருமானம் அதிகரிக்கும்.
16-12-2014 வரையிலும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 3-ல் உள்ளார். 3-ஆம் இடம் என்பது சகோதர ஸ்தானம். இந்த ஸ்ரீஜய வருடத்தில் சனி பகவான் அவரவர் வயதுக்கேற்ப நல்ல பலன்களையே வழங்குவார். வேலைவாய்ப்பு, திருமணம், தூரதேசப் பயணம், பிரிந்தவர்கள் ஒன்றுசேர்தல், வழக்குகளில் வெற்றி, மருத்துவச்செலவுகள் குறைதல் போன்ற நல்ல பலன்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் இருந்துவந்த மந்த நிலையும் மாறும். ராசிக்கு 5-ஆம் இடமானது, குலதெய்வ மற்றும் குழந்தை பாக்கியத்தைத் தெரிந்துகொள்ளும் இடம். சனி பகவான் துலா ராசியில் அமர்ந்து 3-ஆம் பார்வையாக ராசிக்கு 5-ஆம் வீடான தனுசுவைப் பார்க்கின்றார்.
இதன்காரணமாக 16-12-2014 வரையிலும் சனி பகவான் அருளால் நல்ல பலன்களையே பெறுவீர்கள். ஒருசிலர் தங்களுக்கு குழந்தை பாக்கியமே கிட்டாது என்று இருந்திருப்பார்கள். அவர்களுக்கு அடுத்தடுத்து குழந்தைகள் பிறக்கும். ஆண் வாரிசு இல்லையே என்று ஏங்கியவர்கள் ஆண் வாரிசை அடைவார்கள். நீண்டநாட்களாக திருமணம் நடக்காமல் உள்ளவர்களுக்கு திருமணம் கைகூடும். சனி பகவான், சிம்ம ராசிக்கு 9-ஆம் வீட்டை- பிதா, பாக்கிய ஸ்தானத்தை 7-ஆம் பார்வையாகப் பார்க்கின்றார். எனவே தந்தையின் சொத்துகளை அடைவதில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
பூமி சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். பங்காளிகளுக்குள் ஒற்றுமை ஏற்படும். பிரிந்துவாழும் தம்பதியர்கள் ஒன்றுசேர்வார்கள். ரத்தம் சம்பந்தப்பட்ட நோயால் அவதியுற்றவர்களின் மருத்துவச் செலவு குறையும். விவசாயத் தொழிலில் உள்ளவர்கள் நல்ல மகசூலைப் பெறுவார்கள். இதற்கு முன்னர் நீங்கள் யாருக்கேனும் கடன்கொடுத்து அது வசூலாகாமல் இருந்தால், இந்த ஆண்டு அந்தத் தொகை வசூலாகிவிடும். ஷேர் மார்க்கெட் தொழில் செய்கின்றவர்கள் நிதானமாகச் செய்யவேண்டும். இல்லையெனில் பேராசையால் சொந்த முதலீட்டையே இழக்கவேண்டியது வரும்.
21-6-2014 முதல் ராகு பகவான் உங்களது ராசிக்கு 2-ஆமிடமான தனஸ்தானத்தில் அமர்வார். எனவே பொருளாதாரநிலை உயரும். கண் திருஷ்டி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பழைய கடன்களை அடைப்பீர்கள். உங்கள் எண்ணப்படி- நீண்டநாட்கள் போட்ட திட்டப்படி அனைத்து நிலைகளிலும் முன்னேற்றம் உண்டு. ஒருசிலர் வெளிநாடு சென்று அதிகமாகப் பொருளீட்டுவார்கள். சேமிப்பை உயர்த்துவார்கள். நிலம், புதிய வீடு வாங்குதல் போன்ற நல்ல பலன்களை அடைவார்கள். நீண்டகாலமாக வராமலிருந்த தொகை வந்துசேரும். விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும். திருமணப்பேச்சுகள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். குலதெய்வ வழிபாடு செய்துவருவீர்கள். அவரவர் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். இதுவரை எட்டாத கனியாய் இருந்துவந்த அரசுப்பணி ஒருசிலருக்கு கிட்டும். பணவரவு கூடும். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். சொந்தமாகத் தொழில்செய்து சிலர் முன்னேறுவார்கள். தொழில் வளர்ச்சிக்காக வங்கிக்கடன், அரசு நிதியுதவி போன்றவை தடையின்றிக் கிடைக்கும்.
கேது பகவான் உங்கள் ராசிக்கு 8-ல் (மீன வீட்டில்) 21-6-2014 முதல் வருகின்றார். இந்த காலகட்டத்தில் நீங்கள் எதிலும் எச்சரிக்கையாகச் செயல்படவேண்டும். வாகனங்களில் மிகவும் நிதானமாகச் செல்லவேண்டும். இரவில் நீண்ட தூர கார் பயணத்தைத் தவிர்க்கவேண்டும். பேருந்து அல்லது ரயிலில் செல்வது உத்தமம். நல்லவர்கள் நட்புண்டு.
அயல்நாட்டுப் பயணம் லாபத்தைத் தரும். அயல்நாடு சென்று தொழில்செய்யும் உங்கள் பிள்ளைகள் நல்ல வருவாயை ஈட்டுவார்கள். அரசாங்க உதவியை எதிர்பார்த்திருக்கும் தொழிலதிபர்களின் எண்ணம் கைகூடும். உங்கள் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகள் உயர்கல்வி பயில்வதில் இருந்து வந்த தடைகள் அகலும். கடிதத் தொடர்பில் நல்ல தகவல்கள் வந்து சேரும். கற்ற கல்வி பலன் தராமல் இதுவரை வீட்டில் இருந்துவந்த பிள்ளைகளில் சிலர், மத்திய அரசின் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். குடும்பப் பிரச்சினைகள் அனைத்திற்கும் நல்ல தீர்வுகள் கிடைக்கும்.
ஒருசிலரது குடும்பத்தில் மனைவிக்கு உடல்நலக் குறைவுகள் ஏற்படலாம் என்றாலும் இழப்புகள் எதுவும் வராது. அஷ்டமத்தில் கேது பகவான் இருப்பதால், மனதுக்குள் எப்போதும் பயம் இருந்துகொண்டே இருக்கும். மனசாட்சிக்கு பயப்படுபவர்களை கேது பகவான் கெடுக்கமாட்டார். மனசாட்சிக்கு பயம் கொள்ளாதவர்களை கேது பகவான் தண்டித்துவிடுவார். சிம்ம ராசி அன்பர்கள் எப்போதும் குடும்ப உறுப்பினர்களிடம் கோபமின்றிப் பழகவேண்டும். 21-6-2014-ல் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளை, பெற்றோர்கள் பக்குவமாகப் பேசித் திருத்த வேண்டும். கல்வியில் உயர்வார்கள். கலைகளில் ஈடுபாடும், கவர்ச்சி யாகப் பேசும் தன்மையும் ஏற்படும். எதிலும் நிதானித்துச் சென்றால், அஷ்டமத்துக் கேதுவை அதிர்ஷ்டமுள்ள கேதுவாக மாற்றலாம்.

பெண்கள்
உங்களின் நிதானமான செயல்பாடுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவியிடையே அன்பு மேம்படும். திருமணமாகாத பெண்களுக்கு 12-6-2014-க்குள் திருமணம் முடியும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். விருந்து, விழா என அடிக்கடி சென்றுவருவீர்கள். உறவினர்கள் வருகையும், அவர்களின் ஒத்துழைப்பும் சந்தோஷத்தை அளிக்கும். 13-6-2014-க்குப் பிறகு உறவினர் மத்தியில் சண்டை, சச்சரவுகள் வரலாம். எனவே எல்லாரிடமும் அளவாகப் பேசி உறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மாணவர்கள்
மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டு மிகச்சிறப்பானதாக அமையும். விரும்பிய பாடம் கிடைக்கும். அடுத்த கல்வியாண்டில் அக்கறை எடுத்துப் படிக்கவேண்டியது வரும். மாணவர்கள் தங்களின் பெற்றோர், ஆசிரியரின் வழிகாட்டுதல்படி நடப்பது நன்மை தரும்.

தொழிலதிபர்கள்- வியாபாரிகள்
தொழில் மற்றும் வியாபாரத்தில் விறுவிறுப்பாகச் செயல்படுவீர்கள். ஆதாயம் கூடுதலாகும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். திட்டமிட்டபடி விரிவாக்க முயற்சியில் ஈடுபட்டு வெற்றிகாண்பீர்கள். புதிய தொழில் முயற்சியில் கால்பதித்து சாதனை படைப்பீர்கள். அரசுவகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு வளர்ச்சிக்குக் கைகொடுக்கும். 12-6-2014-க்குப் பிறகு நன்மைகள் குறையத் தொடங்கும். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மைகள் தாமதமாகும். யாரையும் நம்பி முக்கிய ஆவணம், பணம் போன்றவற்றை ஒப்படைக்கக்கூடாது. கேது 8-ல் அமர்ந்து சாதகமற்ற நிலையில் உள்ளதால் நிர்வாகச் செலவுகள் கூடும்.

விவசாயிகள்
இந்த ஆண்டில் நல்ல விளைச்சலும், அதற்கேற்ற வருமானமும் கிடைக்கும். விவசாயப் பணிக்கான பணம் எளிதில் கிடைக்கும். உழவர்கள் திட்டமிட்டபடி நவீன உழவுக்கருவிகள் வாங்குவார்கள். வழக்கு விவகா ரங்களின் முடிவு உங்களுக்கு சாதகமாக அமையும். 13-6-2014க்கு மேல் அதிக நன்மைகள் இருக்காது. திட்டமிட்ட செலவுகள் உங்களை கடன்படாமல் வைத்துக்கொள்ளும்.

அரசுப் பணியாளர்கள்
ஆண்டின் துவக்கம் முதல் 12-6-2014 வரையிலும் பணியாளர்கள் நன்மையை எதிர்பார்க்கலாம். மேலதிகாரிகளின் ஆதரவு நல்லமுறையில் கிடைக்கும். சக ஊழியர்களினால் உதவி கிட்டும். ஒருசிலருக்கு வேலை, பதவி உயர்வு கிடைக்க யோகமுண்டு. மாற்று வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்தில் புதியவேலை கிட்டும். 13-6-2014-க்குப் பிறகு பணிச்சுமை அதிகரிக்கும். உடன்பணிபுரியும் பணியாளர்களால் எதிர்பாராத சிரமங்கள் வரும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

கலைத்துறையினர்
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். அரசு வகையில் பாராட்டும் விருதும் வந்துசேரும். 13-6-2014 முதல் எதிலும் நிதானம் தேவைப்படும். கடின முயற்சியால் மட்டுமே புதிய ஒப்பந்தங்களைப் பெற முடியும். சிறிய பட்ஜெட் படங்கள் கூடுதல் லாபத்தைத் தரும்.

அரசியல் பிரமுகர்கள்
12-6-2014 வரை குரு பகவான் உங்களுக்கு 11-ஆம் வீட்டில் (லாபத்தில்) உள்ளார். எனவே அரசியல் வெற்றிகள் எதிர்பாராமல் வந்துசேரும். 13-6-2014 முதல் குரு 12-ல் வருவதால், நீங்கள் எதிலும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். புதிய பதவிகள் உங்களைவிட்டு விலகிச் செல்லலாம். எனவே நிதானித்துச் செயல்படவேண்டும்.

80% நன்மை
சிம்ம ராசி அன்பர்கள் இந்த ஆண்டில் 80 சதவிகித நன்மைகளைப் பெறுவார்கள். இந்த ஆண்டு உங்களுக்கு 14 பங்கு லாபம், 8 பங்கு மட்டும் விரயம். ஆரோக்கியம் 6 பங்கு உள்ளது. அவஆரோக்கியம் 5 பங்கு உள்ளது. உடல்நிலை பாதிப்புக்குள்ளானாலும் குணமாகிவிடும். ராஜபூஜிதம் 6 பங்கு (வேலை தேடுபவர்களுக்கு வேலை கிட்டும்), ராஜயோகம் 3 பங்கு, சுகம் 3 பங்கு, துக்கம் 3 பங்கு (கவலைகள் குறையும்). பொதுவாக இந்த ஆண்டு நற்பலன்கள் அதிகம்.

மக நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை ஏழு பங்கு லாபம். எனவே லாபம் கூடுதலாகும். அதிக செலவினம் வராது. நிம்மதியாக வாழ்வீர்கள். காரியத்தடைகள் வராது. ஆவணி முதல் கார்த்திகை வரை இரண்டு பங்கு லாபம் உள்ளது. பணத் தட்டுப்பாடு இருக்காது.
மார்கழி முதல் பங்குனி வரை ஒரு பங்கு லாபம் வருகின்றது. எனவே கூடுதல் செலவுகளைத் தவிர்க்கவேண்டும். சிக்கனமாக வாழ்வது உங்கள் வாழ்க்கைக்கு சிறப்பு.

பூர நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை இரண்டு பங்கு லாபம் வருகிறது. குடும்பம் சீராகச் செல்லும். தடை, தாமதங்கள் வராது. சேமிப்பை உயர்த்திக்கொள்ள வேண்டும். நிம்மதிக் குறைவுகள் வராது. மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.
ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானம் சீராக இருக்காது. எனவே இப்போது உங்களுக்கு சேமிப்பு கைகொடுக்கும். எதிலும் நிதானமாகச் செல்லவேண்டும்.
மார்கழி முதல் பங்குனி வரை நான்கு பங்கு லாபம் வருகிறது. இப்போது நீங்கள் அனைத்து தேவைகளையும் பூர்த்திசெய்து கொள்ளலாம். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை ஐந்து பங்கு லாபம் உள்ளது. எதிர்பாராத லாபம், எல்லாவற்றிலும் மேன்மையுண்டு. இப்போது சேமிப்பை உயர்த்திக் கொள்வீர்கள்.
ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானம் சீராக இருக்கும். மார்கழி முதல் பங்குனி வரை இரண்டு பங்கு லாபம் வருகிறது. எனவே சௌக்கியம் ஏற்படும். தனலாபம் உண்டு. எதிர்கால யோகம் உண்டு.

ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிடப் பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீ சரபேஸ்வரருக்கு எலுமிச்சை பழ தீபமேற்றினால் தீமைகள் குறையும்.

சிவன் கோவிலில் பச்சரிசி மாவு அபிஷேகம் செய்தால் நன்மை அடையலாம்.இவ்வழிபாடுகளை செய்ய இயலாதவர்கள் வீட்டில் கந்தசஷ்டி கவசம் படித்து வந்தால் தீமைகள் குறையும். (கந்தசஷ்டி கவசம் படிக்க முடியாதவர்கள் டி.வி.டி-யில் கேட்டுப்பயன் பெறலாம். தீமைகள் குறையும்).