Wednesday, April 9, 2014

2014 தமிழ் ஜய வருட பலன்கள்-மீனம்

12-meena-rasi 
மீனம்: பூரட்டாதி 4-ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி முடிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு…….)
 
உங்கள் இராசிநாதன் குரு பகவான், வெகு அமர்க்களமாக கேந்திரத்தில் அமர்ந்து விட்டார். சந்திரனோடு தனாதிபதி செவ்வாய் உள்ளார். பொன், பொருள் தேடி வரும். வாக்கு பலிதம் உண்டாகும். குடும்பாதிபதி 7-ல் இருப்பதால், குடும்பத்தில் இத்தனை நாட்கள் நடைபெறாமல் இருந்த சுபநிகழ்ச்சிகள்திருமணங்கள் தடையில்லாமல் நடைப்பெறும். அம்பாள் அனுகிரகத்தால் சுபங்கள் பலர் மெச்சும்படி அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு கைமேல் நல்ல பலன் கிடைக்கும். புதிய தொழில் சிலருக்கு அமையும். சுகஸ்தானத்தில் குரு. அந்த வீட்டுக்குரிய புதன் உங்கள் இராசியில் இருப்பதால், உடலில் இருந்து வந்த ரோகங்கள் அத்தனையும் விலகிவிடும். மனக்குழப்பம் தீரும். யோகமான வாழ்க்கை அமையும்.
12-6-2014 வரை முக்கிய கிரகமான குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ஆம் இடமான மிதுனத்தில் இருப்பார். 4-ஆம் இடத்து குரு மன உளைச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்குவார். என்றாலும் அவர் உங்கள் ராசிநாதன் என்பதால், அதிகபட்ச கெடுபலன்களைத் தரமாட்டார். அது மட்டுமல்ல; குரு பகவான் 4-ல் உள்ள இந்த காலகட்டத்தில் ஒருசிலர் வேறு நகரம் செல்வார்கள்.
12-6-2014 வரையிலும் மீன ராசி அன்பர்களில் பெரும்பாலானோர் சிரமத்தை அடைய நேரிடும். நல்லவர்களாக வாழ்ந்துவரும் அன்பர்கள் கெடுதல் எதையும் அடையமாட்டார்கள். தீய வாழ்க்கை வாழ்பவர்கள் ஏதாவது ஒரு பிரச்சினைக்காக சொந்த இருப்பிடத்தைவிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்வார்கள். சிலருக்கு பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாக இருக்காது. உறவினர் மத்தியிலும் நல்ல மதிப்பு இருக்காது.
நல்லவர்களாகவே வாழும் மீன ராசி அன்பர்கள் குரு 4-ல் உள்ள இந்த காலகட்டத்தில் வேறு நகரம் செல்வார்கள். அடகு வைத்த நகைகளை மீட்பார்கள். ஒருசிலர் நூதன தொழில் தொடங்குவார்கள். அரசு ஊழியர்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதலில் செல்வார்கள். மாறுதலில் சென்றாலும் வசதி வாய்ப்போடு வாழ்வார்கள். கையூட்டு பெறுகின்ற அரசு ஊழியர்கள் காவல்துறை நடவடிக்கைக்கு ஆளா வார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வாகனங்களில் வேகமாகச் செல்லக்கூடாது. சிறு விபத்தை சந்திக்க நேரும். பொதுவாக மீன ராசி அன்பர்கள் எல்லா காரியங்களிலும் சற்று யோசித்துச் செயல்பட வேண்டும். தேவையற்றவர்களின் நட்பை உதறிவிட வேண்டும். தினசரி தட்சிணாமூர்த்தியை வணங்கிவர நன்மையுண்டு.
குரு பகவான் 13-6-2014 முதல் மிதுன ராசியிலிருந்து, உங்கள் ராசிக்கு 5-ஆம் இடமான கடகராசிக்குச் செல்வார். குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வருகின்றார். அதுமுதல் குலதெய்வ அருளும் குரு பகவான் அருளும் உங்களுக்குக் கிடைக்கிறது. ஒருசிலருக்கு பூர்வீக சொத்தில் இருந்துவந்த வில்லங்கம் நீங்கும். பாகப்பிரிவினைகள் இனிதாக நிறைவேறும். சிலர் பூர்வீக சொத்தில் புதிய வீடு கட்டுவார்கள். சிலர் பூர்வீக வீட்டை மராமத்து செய்வார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். விவாகரத்து போன்ற வழக்குகளை சந்தித்து வருகிறவர்கள், வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொண்டு ஒன்று சேர்வார்கள். குழந்தைகளின் எதிர்கால நன்மைக்காக அதிகம் உழைப்பீர்கள். அரசாங்கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் வந்துசேரும். சிலர் அரசு மானியத்துடன் வங்கிக் கடன் பெறுவார்கள்.
அரசியல் பிரமுகர்களுக்கு இதுவரை எட்டாக் கனியாய் இருந்துவந்த பதவி வலிய வந்துசேரும். சமூகத்தில் நல்ல அந்தஸ்தும் மரியாதையும் உருவாகும். இதுவரை வாட்டி வதைத்துவந்த நோய் குணமாகும். பழைய கடன்பாக்கிகள் பைசலாகும். வரவேண்டிய பாக்கிகளும் வந்துசேரும். போட்டி வியாபாரிகள் விலகிச் செல்வார்கள். இளைய சகோதர- சகோதரிகளில் நல்ல லாபத்தை அடைவீர்கள். ஒருசிலர் வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். உயர்பதவிக்கான தேர்வெழுதியவர்கள் வெற்றிபெறுவார்கள். கடகத்தில் குரு பகவான் வரும் காலம் உங்களுக்கு ஆறுதலான காலம். குரு பகவானின் 5-ஆம் இடத்துப் பார்வையும், 7-ஆம் இடத்துப் பார்வையும் சாதகமாக அமையும். 5-ஆம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 9-ஆம் வீடான விருச்சிகத்தில் விழும். அதன்மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்துமுடிக்கலாம். எனவே நீங்கள் 13-6-2014 முதல் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.
16-12-2014 வரையில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 8-ல் உள்ளார். அஷ்டமத்துச் சனி நன்மைகள் தராது. சனி பகவான் உங்கள் முயற்சியில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பும் கருத்து வேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர்செல்வார்கள். இந்த ஆண்டு முடியும்வரை சனி பகவானின் நிலை இதே இடத்தில்தான் உள்ளது. எதையும் ஆலோசித்துச் செய்யவேண்டும். எடுத்தேன் கவிழ்தேன் என்றில்லாமல் மிகவும் நிதானமாகச் செயல்படவேண்டும்.
சனி பகவான் 8-ல் உள்ள இந்த காலகட்டத்தில் சிலருக்கு உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதித்து, பிறகு மருத்துவத்தின் உதவியால் காப்பாற்றப்படுவார். சிலர் எந்த ஒரு வருவாயும் இல்லாமல் தவிக்கநேரும். இரவு நேரத்தில் தூக்கம் வராது. சிலரின் விலையுயர்ந்த பொருட்கள் களவுபோக வாய்ப்புள்ளது; எச்சரிக்கை தேவை.
அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வைப் பெறுவார்கள். அதேபோல பதவி உயர்வும் வந்துசேரும். முக்கியமான கடன்களை அடைப்பீர்கள். சனி பகவான் 4-3-2014 முதல் 19-7-2014 வரையில் வக்ரத்தில் இருப்பார். எனவே கெடுதல் எதுவும் வராது.
16-12-2014 முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 9-ல் அமர்வார். அப்போது உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். தங்க நகை வியாபாரம் செய்கிறவர்கள் நல்ல லாபத்தை அடைவார்கள். இந்த சனிப்பெயர்ச்சியில் உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த தீயவர்கள் உங்களைவிட்டு விலகிச் செல்வார்கள். 16-12-2014 முதல் சனி பகவான் உங்களுக்கு நல்ல சிந்தனைகளை உருவாக்கித் தருவார்.

21-6-2014 வரை ராகு பகவான் உங்கள் ராசிக்கு 8-ல் (துலாமில்) அமர்ந்து தடை, தாமதங்களை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பை ஏற்படுத்துவார். வெளியூர் பயணத்தை அடிக்கடி உருவாக்குவார். ஆனால் ராகுமீது குருவின் பார்வை விழுவதால், அதிக கெடுதல் வராது.
21-6-2014 முதல் ராகு பகவான் துலா ராசியிலிருந்து இடம்பெயர்ந்து கன்னி ராசிக்கு மாறுகிறார். குடும்ப ஸ்தானத்தில் (7-ல்) ராகு இருக்கும்போது குடும்பத்தில் சின்னச்சின்ன பிரச்சினைகளை உருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும். ஒருசிலருக்கு குடியிருக்கும் ஊரையோ, வீட்டையோ மாற்றுவார். இப்போது புதிய பொருளாதார வாய்ப்புகள் வந்துசேரும். பொருளாதாரநிலை உயரும். குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் பொருளாதாரநிலை உயரும். அவர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள்.
வெளிநாட்டில் வேலை செய்கிறவர்கள் நல்ல சம்பளத்தையும் லாபத்தையும் பெறுவார்கள். வெளிநாடு செல்வதில் தாமதம் ஏற்பட்டுவந்த நிலை மாறும். குடும்பத்தில் பாகப்பிரிவினை சம்பந்தமான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வழக்குகள் சாதகமாகும். மலைபோல்வந்த துயரங்கள் நீங்கும். மனைவியிடம் அன்போடு பேசினால் வளமாக வாழலாம். எனவே குடும்பத்தில் குதர்க்கமான பேச்சுகளைப் பேசாதீர்கள். நோயின் தாக்கம் குறையும். 21-6-2014 முதல் உங்கள் மனதுக்கு உற்சாகம் தரக்கூடிய சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கும். எல்லா முயற்சிகளிலும் வெற்றியைக் காண்பீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உறவினர்களாலும் நன்மையுண்டு. உங்களை ஏமாற்றியவர்கள் உங்களைவிட்டு விலகிச் செல்வார்கள்.
20-6-2014 வரை கேது பகவான் உங்கள் ராசிக்கு 2-ல் இருப்பார். பொதுவாக 2-ல் உள்ள கேது தேசாந்திரியாக்குவார். ஒருபொழுதும் விடியாத பிரச்சினைகளோடு வாழவைப்பார். பொருள் விரயத்தையும், பகைவர்கள் தொல்லையையும் தருவார். 21-6-2014-ல் அவர் இடம்பெயர்ந்து உங்கள் ராசிக்கு வருகிறார். எனவே நீங்கள் நிதானமாகச் செயல்படவேண்டும். உங்கள் முயற்சிகளில் தடை வரலாம். பகைவர்களின் தொல்லை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்படலாம். அதனால் கூடுதல் செலவுகள் வந்து சேரும். இதற்கெல்லாம் காரணம், உங்களிடமுள்ள தீய பழக்கங்களே என்பதை உணர்வீர்கள். தவறை திருத்திக் கொண்டவர்கள் நீண்ட ஆயுளோடு வாழ்வார்கள்.
கேது பகவான் உங்கள் ராசியில் இருக்கும்போது, உங்கள் செயல்களில் திட்டமிடுதல் இருக்கவேண்டும். கெடுபலன்கள் வராது. வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். இருப்பதைக்கொண்டு சிறப்பாக வாழவேண்டும். ஜாமீன் கையெழுத்துப் போடக்கூடாது. விலையுயர்ந்த பொருட்களை மிகவும் கவனமாக வைத்துக்கொள்ளவேண்டும். அரசு ஊழியர்களில் ஒருசிலர் மேலதிகாரிகளின் தண்டனைக்கு ஆட்படுவார்கள். உடன்பிறந்தவர்களால் சுபகாரியங்கள் நடக்கும். எனினும் அவர்கள் உங்களுக்கு எதிராகச் செயல்படுவார்கள். பொருளாதாரத் தட்டுப்பாடு வராது. சகோதர- சகோதரிகளிடையே பலமான கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். மீன ராசி அன்பர்கள் கேது பகவான் தங்கள் ராசியில் இருக்கும்வரை அனைத்து காரியங்களிலும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். நேர்மையான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு எப்போதும் எந்த பாதிப்பும் வராது. அதற்கு குரு பகவான் துணையிருப்பார். எனவே இந்த ஜய வருடம் உங்களுக்கு நல்ல திருப்பத்தை உண்டாகும்.

பெண்கள்

குரு பகவானின் 7-ஆம் பார்வை திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகத்தைக் கொடுக்கும். ஆண்டின் பிற்பகுதியில் நகை, பணம் சேரும். கணவன்- மனைவியிடையே இணக்கமான போக்கு இருக்கும். வேலைசெய்யும் பெண்கள் 13-6-2014-க்குப் பிறகு அரசு சலுகைகளை எதிர்பார்க்கலாம். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும். உடன்பிறந்தோரிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். நீங்கள் ஆசைப்பட்ட பொன், பொருள்களை வாங்கிச்சேர்ப்பீர்கள்.

மாணவர்கள்

13-6-2014 முதல் குரு பகவான் உங்களுக்கு சாதகமாக உள்ளார். எனவே கல்வியில் உயர்வீர்கள். நீங்கள் விரும்பிய பாடத்திட்டத்தில் சேர்வதற்கு இடம் கிடைக்கும். அதிக கவனம் செலுத்துபவர்கள் மெரிட்டில் பாஸ் செய்வார்கள்.

தொழிலதிபர்கள்- வியாபாரிகள்
தொழில், வியாபாரத்தில் லாபத்துக்குக் குறைவராது. வருமானம் அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சிலர் வியாபார விஷயமாக வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டும். அதிக முதல் போடாமல் அறிவைப் பயன்படுத்தி முன்னேற வழிவகை காணவேண்டும். அரசு வகையில் இருந்துவந்த பிரச்சினைகள் மறையும். அனுகூலமான போக்கு காணப்படும். வாசனை திரவியம், அழகுசாதனப் பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். மற்ற வியாபாரம் செய்கிறவர்கள் சராசரியான வருமானத்தைப் பெறுவார்கள். போட்டி வியாபாரிகள் விலகிச்செல்வார்கள்.

விவசாயிகள்
விவசாயிகள் இந்த ஆண்டு நவீன கருவிகளை வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். 13-6-2014-க்குப் பிறகு டிராக்டர் போன்ற விவசாயக் கருவிகளை வாங்குவீர்கள். இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைக்கும். பணப்பயிர்கள் கூடுதல் லாபத்தைத் தரும். அதிக முதலீடு செய்யாமல் குறைந்த முதலீட்டில் லாபம் பெறலாம். மாடு, கன்றுகள் வளர்ப்போர் நல்ல லாபத்தை அடைவார்கள். பால் உற்பத்தியில் அதிகமான லாபத்தைப் பெறுவார்கள். விவசாயிகள் தங்கள் உழவுப் பணியை சிறப்பாகச் செய்வார்கள்.

அரசுப் பணியாளர்கள்
வேலையில் இதுவரை இருந்துவந்த பின்தங்கிய நிலை மாறும். 13-6-2014 முதல் பல சிறப்பான பலன்களைக் காணலாம். கூடுதல் பளு குறையும். முக்கிய கிரகங்கள் உங்களை இடம்மாற்றி விடும் என்பதால், அதனையே உங்களுக்கு சாதகமாக்கி, விரும்பிய இடத்துக்கு மாறுதலைப் பெற்றுவிடுவீர்கள். சில சமயங்களில் கெட்டதும்கூட நல்லதற்காகவே வருகிறது. உங்கள் ஆற்றல் தொடர்ந்து மேம்படும். புதிய பதவி கிடைக்கும். சம்பள உயர்வும் பதவி உயர்வும் உண்டு.

கலைத்துறையினர்
கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். 13-6-2014-க்குமேல் வரவேண்டிய பழைய பாக்கிகள் வந்துசேரும். புதிய படம் ஒப்பந்தமாகும். படம் வெளிவந்து நல்ல வசூலை அடையும். கலைத்துறையினருக்கு இந்த ஜய வருடம் பொற்காலம்.

அரசியல் பிரமுகர்கள்
நீங்கள் செய்த பொதுத்தொண்டு தலைமைக்குத் தெரியவரும். தலைமையால் தனிப்பட்ட முறையில் பாராட்டப்படுவீர்கள். புதிய பொறுப்புகள் வந்துசேரும். தேர்தல் களம் உங்களுக்கு இப்போது சாதகமாக உள்ளது. இதனைப் பயன்படுத்தி வெற்றியைக் காண்பீர்கள்.

80% நன்மை
இந்த ஆண்டு நீங்கள் 80 சதவிகித லாபத்தைப் பெறுவீர்கள். 8 பங்கு லாபம், விரயம் 2 பங்கு, ஆரோக்கியம் 3 பங்கு, அவஆரோக்கியம் 2 பங்கு, ராஜபூஜிதம் 8 பங்கு, ராஜயோகம் 6 பங்கு, 3 பங்கு சுகம், 3 பங்கு துக்கம் என்ற அமைப்பில் உள்ளது. பொதுவாக அஷ்டமத்துச் சனியின் கழிவு காலத்தில், 1-6-2014-க்குமேல் 16-12-2014-க்குள் அதிகமான லாபத்தைத் தரும்.

பூரட்டாதி மற்றும் உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:

சித்திரை முதல் ஆடி வரை நீங்கள் ஏழு பங்கு லாபத்தைப் பெறுவீர்கள். உங்கள் சேமிப்பை உயர்த்திக்கொள்வீர்கள். கூடுதலான வருமானம் வரும் இந்தக் காலம் உங்களுக்கு யோகமான காலம்.
ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானக் குறைவு இருக்கும். எனவே சிக்கனமாகச் செயல்படவேண்டும். காரிய பங்கமும் அலைச்சலும் ஏற்படும்.
மார்கழி முதல் பங்குனி வரை நான்கு பங்கு லாபம் வருகின்றது. குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்ப உறுப்பினர்கள் கேட்டதை வாங்கிக் கொடுக்கமுடியும். சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். குடும்பத்தில் சௌக்கியமும் தனலாபமும் ஏற்படும். எதிர்கால யோகமுண்டு. தடை, தாமதங்கள் நீங்கும். சேமிப்பு உயரும்.

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு:

சித்திரை முதல் ஆடி வரை கூடுதல் வருமானத்தைப் பெறுவார்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானம் ஓரளவுதான் வரும். எனவே சிக்கனத்தைக் கையாளவேண்டும். கூடுதல் செலவுகள் வராது. மார்கழி முதல் பங்குனி வரை ஓரளவு வருமானம் கூடுதலாக வரும். இப்பொழுது அனைத்து வகையிலும் சௌபாக்கியம் ஏற்படும். தனலாபம் ஏற்படும். எதிர்காலம் யோகமாக இருக்கும்.

ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிடப் பரிகாரம்

பிரதோஷ நாளில் நந்தி பகவானை வணங்கி வந்தால் நன்மையுண்டு. அஷ்டமி திதியில் பைரவரை வணங்கி வருதல் நன்மையைத் தரும். குலதெய்வத்தை வணங்கிவர லாபம் பெருகும்.