
உங்கள்
இராசிநாதன் புதன், இராசிக்கு 7-ம்
இடத்தில் அமர்ந்துள்ளார். செவ்வாயோடு, சந்திரன் இணைந்து, சந்திர மங்கள யோகத்தை
கொடுக்கிறான். 3-க்குரியவனோடு இணைந்ததால், முன்னேற்றதிற்கு முழு உதவி செய்வான்.
புதிய நண்பர்களால் பெரும் உதவி கிடைக்கும்.
12-க்குரிய சூரியன், 8-ல் இருப்பது, “விபரீத
இராஜயோகம்” தரும். அரசாங்க வேலையும்
கிடைக்கலாம். தனஸ்தானத்தில் சனி, இராகு இணைந்து
இருப்பதால், குடும்பத்தில் தேவையில்லா செலவு வரும். 6-ல்
சுக்கிரன் இருப்பதால், கடன் பிரச்சினை சற்று
தீரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பாக்கிய கேது, புதிய
தொழில் துவங்க வழி செய்வார்.
குரு பகவான் 13-6-2014-ல் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு மாறுவார். கடகம் உங்கள் ராசிக்கு 11-ஆம் இடம் லாபஸ்தானமாகும். எனவே 13-6-2014-க்கு முன்னர் அடைந்த சிரமங்கள் வராது. குரு பகவானால் அதிகமான நன்மைகளை அடைவீர்கள். இதற்குமுன்னர் உங்களுக்கு இருந்துவந்த ஞாபக மறதி, அலைச்சல், நிம்மதியில்லாமை போன்ற பிரச்சினைகள் நீங்கும். தொழில் செய்பவர்களும் வணிகம் செய்பவர்களும் மிகவும் விழிப்பாகச் செயல்படவேண்டும். பணப் பிரச்சினைகளை நீங்களே நேரடியாகக் கண்காணிப்பது நல்லது. புதிய முயற்சிகள் யாவும் சிறப்பு தரும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள்.
திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்களாக அமையும். உடன்பிறந்தவர்கள் மத்தியில் இருந்துவந்த பிணக்குகள் நீங்கும். நீண்டநாட்களாக குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். மறுமணம் செய்யவுள்ளவர்களுக்கு நல்ல பெண் கிடைக்கும். உங்கள் பிள்ளைகள் வளர்ச்சியில் முன்னேற்றம் உண்டு. ஆனால் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கும் பொருளுதவி கிடைக்காது. ஒருசிலருக்கு நீர்நிலைகளில் கண்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கன்னி ராசி அன்பர்கள் மிகவும் எச்சரிக்கையாகக் குளிக்கவேண்டும். முடிந்தவரை கடல், கண்மாய், ஏரி, அருவியில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
புத்திர- புத்திரிகளால் நல்ல முன்னேற்றம் காணப்படும். தன சேமிப்பு உண்டாகும். ஒருசிலர் சொத்துகளை மனைவி பேரில் பதிவுசெய்வார்கள். அரசு கடன் ரத்தாகி நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் பொன், பொருள், ஆடம்பரச் சேர்க்கை உண்டாகும். இப்போது நீங்கள் புதிய கடன்பெற்று தொழில் தொடங்குவீர்கள். 13-6-2014-ல் குரு பகவான் கடக ராசிக்கு வந்து உங்கள் கன்னி ராசிக்கு நன்மைகளைச் செய்வார். பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். ஒருசிலருக்கு புதிய பதவி கிடைக்கும்.
குருவின் 5, 7, 9-ஆம் இடத்துப் பார்வைகளால் நல்ல பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் குதூகலத்தைக் காண்பீர்கள். சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். ஒருசிலருக்கு அதிர்ஷ்டவசமாக பொருளாதார வளம் கூடும். பெண்களால் நன்மை உண்டாகும். 9-ஆம் இடத்துப் பார்வையால் செல்வாக்கு மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆடம்பர வசதி மேலோங்கும்.
சனி பகவானைப் பொறுத்தவரையிலும், உங்கள் ராசிக்கு 2-ல் பாதக சனியாக இருக்கிறார். 16-12-2014 வரை சனி பகவான் 2-ல் உள்ளதால், அரசு அதிகாரிகளுக்கு விரும்பிய இடமாற்றம் அமையாது. உடல் நிலையில் முன்னேற்றம் உண்டு. மருத்துவச் செலவுகள் குறையும். இரும்பு, சிமெண்ட், மின் சாதன வியாபாரம் செய்பவர்கள் ஓரளவு லாபத்தை அடைவார்கள்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு 11-ஆம் வீடான சந்திரன் வீட்டை 10-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். எனவே உடன்பிறந்தோரிடையே உறவுகள் சுமுகமாக இருக்காது. பூர்வீக சொத்துகள் பிரச்சினையில் வம்பு, வழக்குகள் வரும். மூத்த சகோதர- சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக இருக்கமாட்டார்கள். வருமானம் அனைத்தும் குடும்பச் செலவு களுக்கே சரியாகும். அதிக உழைப்பில் குறைந்த லாபத்தைப் பெறுவீர்கள். திருமணமாகி, கணவன் வீட்டிலுள்ள கன்னி ராசிப் பெண்கள், கணவன் மனம் கோணாமல் நடக்கவேண்டும். நாத்தனார்களால் பிரச்சினைகள் வரலாம். நாத்தனார்தானே என்று மனம்திறந்து எதையும் சொல்லிவிடாதீர்கள். இப்படிப்பட்ட சில சோதனைகளுக்குப் பின்பு, சனி பகவான் கோபுர உச்சி அளவிற்கு நன்மைகளையும் செய்வார். எனவே நீங்கள் எப்போதும் நிதானமுடன் செயல்படவேண்டும்.
16-12-2014 முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 3-ல் வந்து அமர்வார். அதுமுதல் சனி பகவான் அவரவர் தகுதிக்கேற்ப நற்பலன்களை வழங்குவார். வேலைவாய்ப்பு, திருமணம், தூரதேசப் பயணம், பிரிந்தவர்கள் ஒன்றுசேர்தல், வழக்குகளில் வெற்றி, மருத்துவச் செலவுகள் குறைதல் போன்ற பலன்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறும்.
ராசிக்கு 5-ஆம் இடம் குலதெய்வம் மற்றும் குழந்தை பாக்கியத்தைத் தெரிந்துகொள்ளும் இடம். 16-12-2014 முதல் சனி பகவான் விருச்சிக ராசியில் அமர்ந்து 3-ஆம் பார்வையாக 5-ஆம் வீடான மகரத்தைப் பார்க்கின்றார். இதன்காரணமாக அடுத்த சனிப்பெயர்ச்சி வரையிலும், சனி பகவான் நல்ல பலன்களையே அருள்வார். ஒருசிலர் குழந்தை பாக்கியமே கிட்டாது என்று இருந்திருப்பார்கள்.
அவர்களுக்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறக்கும். ஆண் வாரிசு இல்லையே என்று ஏங்கியவர்கள் ஆண் வாரிசை அடைவார்கள். நீண்ட நாட்கள் திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பங்காளிகளுக்குள் ஒற்றுமை ஏற்படும். பிரிந்துவாழும் தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். ரத்தம் சம்பந்தப்பட்ட நோயால் அவதிப்படு பவர்களின் மருத்துவச் செலவு குறையும். விவசாயத் தொழிலில் உள்ளவர்கள் நல்ல மகசூலைப் பெறுவார்கள். நீங்கள் யாருக்கேனும் கடன்கொடுத்து அது வசூலாகாமலிருந்தால் சனிப்பெயர்ச்சிக்குப்பின் அந்தத் தொகை வசூலாகிவிடும்.
21-6-2014 முதல் ராகு பகவான் உங்கள் செல்வ நிலையை உயர்த்தித் தருவார். பொதுவாக ஜென்மத்தில் ராகு சஞ்சரித்தால், சிந்தித்துச் செயல்படவேண்டுமென்று சொல்வார்கள். பிறந்த ஜாதகத்தில் ஜென்மத்தில் ராகு இருக்கப் பிறந்திருந்தால், நீங்கள் யோகக்காரர். அதேபோல ஜெனனத்தில் சந்திரனுடன் ராகு இருக்கப் பிறந்திருந்தாலும் யோகத்தைத் தரும். 21-6-2014 முதல் ஜென்மத்தில் உள்ள ராகுவால் அதிகமான அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நீங்கள் நினைத்தபடி அனைத்து காரியங்களிலும் வெற்றியையும் பொருளாதார உயர்வையும் பெறுவீர்கள். புதிய கான்டிராக்ட் வந்துசேரும்.
அரசுப் பணியாளர் களுக்கு அனுகூலம் கிடைக்கும். நீங்கள் நினைத்துப் பார்க்காத அளவுக்கு வாழ்க்கையில் உயர்நிலைக்குச் சென்றுவிடுவீர்கள். கூட்டாளிகள் எப்போதும் உங்களுக்குத் துணையாக இருப்பார்கள். என்றாலும், உங்கள் ஜாதகத்தில் 10-க்குரியவர் 6-ல் இருந்தாலும், 6-க்குரியவர் 10-ல் இருந்தாலும் கூட்டாளிகளை நம்பக்கூடாது. மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். ராகு பகவான் பலம்பெறும் இந்த காலகட்டத்தில் பயணங்கள் அதிகரிக்கும். ஒருசில அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவியில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் வரும். எந்த இலாகாவிற்குச் சென்றாலும் லாபகரமானதாகவே இருக்கும். குடும்பத்தில் கவலைகள் மறையும். நல்ல செய்திகள் வரும். ஒருசிலர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். ஒருசிலர் ஆலயப்பணியில் அதிக ஈடுபாடு கொள்வார்கள். எந்த காரியத்தையும் குலதெய்வத்தை வழிபட்டுச் செய்யவேண்டும் என்ற எண்ணம் வரும். ஒருசிலர் திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை தரிசித்து வந்து நல்ல பலன்களை அடைவார்கள். மனைவிவழி உறவுகளில் திருப்தியான பண வரவுகளைப் பெறலாம்.
ஸ்ரீஜய வருடத்தில் 21-6-2014 முதல் கேது பகவான் உங்கள் ராசிக்கு 7-ல் மீன வீட்டில் வருவார். 7-ல் உள்ள கேது எப்போதும் சந்தோஷ செய்திகளையே வழங்குவார். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பொன்னும் பொருளும் வாங்கவேண்டுமென்று எண்ணம் மேலோங்கும். ஒருசிலர் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்வார்கள். முக்கிய நபர்கள் உங்கள் வீட்டுத் திருமணத்தில் கலந்துகொண்டு நடத்திவைப்பார்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்துசேரும். ஒருசிலர் குலதெய்வக் கோவிலை எடுத்துக்கட்டுவார்கள். எப்போதும் குடும்பத்தில் சுபச்செலவுகளே நடக்கும். அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் உண்டு. ஆன்மிகப் பயணம், ஆன்மிகப் பணிகளில் அதிகமான ஈடுபாடு ஏற்படும். மாற்று மொழியினரால் அதிகமான லாபத்தைப் பெறுவீர்கள். வீட்டில் சுபகாரிய பேச்சுகள் கைகூடும். ஒருசிலர் புதிய வீடுகட்ட போட்ட திட்டம் நிறைவேறும்.
தொழில் சம்பந்தப்பட்ட பயணங்கள் அதிகம் வரும். தற்காலிக அரசுப் பணி செய்பவர்களுக்கு பணி நிரந்தரமாகும். இதுவரையிலும் எந்தவிதமான வேலைவாய்ப்புமின்றி வீட்டில் முடங்கிக்கிடந்தவர்கள், வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள். கூடுதல் வியாபாரம் நடக்கும். விற்பனையைப் பெருக்குவதற்காக வங்கியில் கேட்ட கடன் எளிதாகக் கிடைக்கும். முன்பு பிரிந்த கூட்டாளிகள் மீண்டும் சேர்வார்கள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தும் கீர்த்தியும் உருவாகும். எதையும் சாதிக்கும் வல்லமை ஏற்படும். எடுத்த காரியங்கள் யாவும் அடுத்தடுத்து நடைபெறும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். பணியாட்களைக் கொண்டு புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள். ஒருசிலருக்கு கௌரவப் பதவியும், அதிக லாபமும் கூடிவரும். குடும்பத்தில் கல்வி உயர்வு, திருமணம் ஆகிய நிகழ்ச்சிகளுக்குக் குறைவிருக்காது. அதேசமயம் எதிலும் நிதானித்துச் செல்ல மறக்கவேண்டாம். எப்போதும் சொல்லிலும் செயலிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நல்ல பெயரோடு குடும்ப ஒற்றுமையோடு வாழ்வீர்கள்.
பெண்கள்
கணவர் வீட்டாரின் ஆதரவு சீராகக் கிடைக்கும். பிள்ளைகளால் அவ்வப்போது சிரமம் ஏற்பட்டாலும், அவர்களின் வளர்ச்சிகண்டு சந்தோஷம் காண்பீர்கள். ஒருசிலர் உறவினர்களுடன் ஆன்மிக சுற்றுலா சென்றுவருவார்கள். புதிய ஆடை, ஆபரணம் வாங்கிச் சேர்ப்பார்கள். குழந்தையில்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
மாணவர்கள்
இந்த கல்வியாண்டில் படிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும். ஆனால் அடுத்த கல்வியாண்டு சிறப்பாக இருக்கும். மாணவர்கள், பெற்றோர்- ஆசிரியர் வழிகாட்டுதலைப் பின்பற்றி கல்வியில் உயர்வார்கள். கல்வியோடு கலை, விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் உண்டாகும். நல்ல நண்பர்களின் அறிமுகத்தால் வளர்ச்சி காண்பார்கள்.
தொழிலதிபர்கள்- வியாபாரிகள்
தொழில், வியாபாரத்தில் விடாமுயற்சி தேவைப்பட்டாலும், வருமானத்திற்குக் குறைவிருக்காது. தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சீராகக் கிடைக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் 13-6-2014 முதல் கிடைக்கும். யாரையும் நம்பி முக்கிய ஆவணம், பணத்தை ஒப்படைப்பது கூடாது. தொழில், வியாபாரரீதியான வெளியூர், வெளி நாட்டுப் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். விரிவாக்கம், புதிய தொழில் முயற்சி ஆகியவற்றை 13-6-2014-க்கு பிறகு (குரு 11-ல் வரும்போது) மேற்கொள்ள வேண்டும். எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.
விவசாயிகள்
இந்த ஆண்டு விவசாயிகள் நல்ல மகசூலைப் பெறுவார்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர் சாகுபடிமூலம் ஆதாயம் காண்பார்கள். நவீன உழவுக் கருவிகள் மூலம் பணியை மேம்படுத்துவர். கால்நடை வளர்ப்பிலும் ஓரளவு லாபம் கிடைக்கும். கடந்தகாலத்தில் இருந்த பணப் பற்றாக்குறை நீங்கும்.
அரசுப் பணியாளர்கள்
இந்த ஸ்ரீஜய ஆண்டில் அரசு ஊழியர்கள் தங்கள் பணியில் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். வேலைமீதான வெறுப்பு 13-6-2014 முதல் இருக்காது. அதன்பின் உயர்ந்த நிலையைக் காண்பீர்கள். மேலதிகாரி களின் ஆதரவு இருக்கும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிட்டும். ஒருசிலர் பதவி உயர்வோடு கேட்ட இடத்திற்கு மாறுதலில் செல்வார்கள்.
கலைத்துறையினர்
இந்த ஆண்டில் கலைத்துறையினர் சிறப்பான பலன்களை அடைவார்கள். முயற்சியின்பேரில் புதிய படவாய்ப்புகள் கிடைக்கும். மக்கள் மத்தியில் புகழ் ஏற்படும். தொழில்ரீதியாக அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
அரசியல் பிரமுகர்கள்
இந்த ஆண்டு 13-6-2014 முதல் உங்களுக்கு பொற்காலம். நீங்கள் செய்துவரும் அரசியலில் சேவைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பொது மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பெரிய பதவிகள் வந்துசேரும். தலைமையால் பாராட்டப்படுவீர்கள். ஒருசிலர் அமைச்சர் ஆவார்கள். குருப்பெயர்ச்சிக்குப் பின் உங்களுக்கு வசந்த காலம்.
85% நன்மை
இந்த ஆண்டு கன்னி ராசி அன்பர்கள் 2 பங்கு ஆதாயம் பெறுவர். விரயம் 2 பங்கு, ஆரோக்கியம் 4 பங்கு, அவஆரோக்கியம் 6 பங்கு (உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்), ராஜபூஜிதம் 5 பங்கு, ராஜயோகம் 6 பங்கு, சுகம் 3 பங்கு, துக்கம் 3 பங்கு. எனவே எப்போதும் வருமானம் உண்டு.
உத்திரம் மற்றும் அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த ஆண்டு சித்திரை முதல் ஆடி வரை லாபம் அதிகம் வராது. சீரான செலவுகளுக்கு வருமானம் பயன்படும். ஆவணி முதல் கார்த்திகை வரை இரண்டு பங்கு வருமானம் வரும். நினைத்த பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். இந்த காலகட்டத்தில் சௌபாக்கியம் உண்டு. தனலாபம் உண்டு. எதிர்கால யோகம் உண்டு.
மார்கழி முதல் பங்குனி வரை வருமானம் சீராக இருக்காது. எனவே அதிக செலவுகளைத் தவிர்க்கவேண்டும். நிதானித்துச் செல்லாவிடில் அதிக கஷ்டம் வரும். காரிய பங்கமும் அலைச்சலும் ஏற்படும்.
சித்திரை (1, 2-ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை மூன்று பங்கு லாபம். காரிய வெற்றி உண்டு. சேமிப்பு நிலை உயரும். தக்க நேரத்தில் அது பயன்படும்.ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானம் சுமாராக உள்ளது. எனவே தேவையற்ற செலவுகளைக் குறைக்கவேண்டும். மார்கழி முதல் பங்குனி வரை மூன்று பங்கு ஆதாயம் உண்டு. சௌபாக்கியம் ஏற்படும். தனலாபம் உண்டு. எதிர்காலம் யோகத்தோடு இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சேமிப்பு உயரும்.
ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிடப் பரிகாரம்
முடிந்தவரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் அருகிலுள்ள பிரத்தியங்கரா கோவிலில், பிரத்தியங்கரா தேவிக்கு எலுமிச்சை மாலை அணிவித்து அர்ச்சனை செய்துவர காரியத்தடைகள் வராது. முடியாதவர்கள் உங்கள் வீட்டிற்கே தேடிவரும் ஏழை, எளியவர்களுக்கு (பிச்சைகேட்டு வருபவர்களுக்கு) முடிந்த அளவு அன்னதானம், ஆடை தானம் செய்துவர, ஆண்டு முழுவதும் நல்ல பலன்களே கிடைக்கும்.