
உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் குரு பகவான் வலுவாக அமர்ந்திருக்கும்போது இந்த ஜய வருடம் பிறப்பதால் பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் அடுத்தடுத்து நல்லது நடக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் ஆதரவு கிட்டும். இந்தப் புத்தாண்டு உங்களின் 5ம் வீட்டில் பிறப்பதால் அடிப்படை வசதிகள் உயரும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். வரன் தேடித்தேடி அலுத்துப்போன உங்களின் மகளுக்கு இந்த ஆண்டு திருமணமும் சீரும் சிறப்புமாக முடியும். மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் யாவும் சாதகமாக முடியும்.
எனவே நீங்கள் 12-6-2014 வரையிலும் குரு பகவான் அருளால் அதிகமான லாபத்தைப் பெறுவீர்கள். அரசு ஊழியர்களைவிட, வியாபாரம் செய்கிறவர்கள் அதிகமான லாபத்தைப் பெறுவார்கள். இனிப்பு, ஜவுளி, கண்ணாடி, ரசாயனம், மருந்து ஆகிய துறைகளில் உள்ளவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். நல்ல வாய்ப்புகளும் தேடிவரும். திருமணமாகாத ஆண்- பெண் இருசாராரும் நல்ல வரன்கள் அமைந்து, சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள். மூடிக்கிடந்த ஆலையைத் திறந்துள்ள முதலாளிகள் 12-6-2014 வரை எதிர்பாராத லாபத்தைப் பெறுவார்கள். மருத்துவமனை நடத்துபவர்கள் மேலும் விரிவாக்கம் செய்வார்கள். ஒருசில மருத்துவர்கள் வெளிநாடு சென்று தொழில் செய்வார்கள். பூர்வீக சொத்துகளால் நல்ல பலன்கள் ஏற்படும். வருமானம் இரட்டிப்பாகும்.
உங்களை மறந்துபோன தூரத்து உறவினர்கள் தேடி வந்து சொந்தம் கொண்டாடுவார்கள். சொந்த ஊரிலுள்ள பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. ஜூன் 12ந் தேதி வரை உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பதால் நினைத்த காரியங்கள் சுலபமாக முடியும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிட்டும். புது வாகனம் வாங்குவீர்கள்.
இத்தகைய நற்பலன்களை வழங்கிய குரு பகவான் 13-6-2014-ல் உங்கள் ராசிக்கு 3-ல் உலா வருகின்றார். அது அவ்வளவு சிறப்பானதல்ல. குரு பகவான் கடகத்தில் அமர்ந்துள்ள காலத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இருப்பதைக்கொண்டு சிறப்பாக வாழவேண்டும்.ஜூன் 13ந் தேதி முதல் வருடம் முடியும் வரை குரு 3ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள், திட்டங்கள் தாமதமாகி முடியும். ஒரே வேலையை இரண்டு, மூன்று முறை முயன்று போராடி முடிக்க வேண்டியது வரும். அவ்வப்போது சோர்வடைவீர்கள். திடீர் பயணங்கள் அதி கரிக்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். இளைய சகோதர வகையில் சங்கடங்கள் வரும். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துபோகும். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டுவிடாதீர்கள். விலையுயர்ந்த பொருட்களை மிகவும் கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும். அரசுப் பணியாளர்களில் ஒருசிலர் மேலதிகாரிகளின் தண்டனைக்கு ஆளாகநேரும்.
ஜூன் 20ந் தேதி வரை ராகுபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் தொடர்வதால் உங்களின் சின்னச் சின்ன கனவுகள் நனவாகும். வெளிநாட்டிலி ருக்கும் நண்பர்கள், உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கி லோன் கிடைக்கும். ஆனால், கேது 12ல் மறைந்து நிற்பதால் திட்டமிடாத பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் சுயநலவாதிகளை கண்டறிவீர்கள். சில நாட்கள் தூக்கம் குறையும். ஜூன் 21ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 5ல் ராகு அமர்வதால் பிள்ளைகளின் பிடிவாத குணம் அதிகமாகும்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு 6-ல் 15-12-2014 வரை உலா வருகிறார். சனி 6-ல் உள்ள இந்த காலகட்டத்திலும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பொருட்களை கவனத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். எனினும் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் ஏற்படும். ஆவணி, தை, மாசி, பங்குனி மாதங்களில் திடீர் பணவரவு, வீடு, வாகனம் வாங்கும் யோகம், புதியவரின் நட்பெல்லாம் உண்டாகும். கல்யாண முயற் சிகள் பலிதமாகும். ஐப்பசி மாதம் உங்கள் ராசிநாதனான சுக்கிரனும், சுகாதிபதியான சூரியனும் வலுவிழந்து காணப்படுவதால் தொண்டைப் புகைச்சல், உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி, முன்கோபம், குடும்பத்தில் சலசலப்பு, வாகனப் பழுது வந்து செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். பெற்றோரின் ஆரோக்யம் பாதிக்கும்.
அவர்களுடன் மனக்கசப்பு வந்து விலகும். டிசம்பர் 15 வரை உங்களின் யோகாதிபதியான சனி பகவான் 6ம் வீட்டில் நிற்பதால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். தள்ளிப்போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள்.
ரிஷப லக்னக்காரர்கள் சனி பகவானால் அதிக பலன்களை அடைவார்கள். சனி ஒருவரே ராஜயோகத்தைத் தரவல்லவர். எனவேதான் ரிஷபம் லக்னமாக அமைந்த அன்பர்கள் அதிகமான நற்பலன்களை அடைவார்கள். சனி பகவானும் குரு பகவானும் உங்கள் முயற்சிகளில் வெற்றிகளைத் தருவார்கள். உங்கள் ஆற்றல் மேம்பட்டு வரும். பகைவர்களை முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். ரிஷப லக்ன அன்பர்கள் பகைவர்களின் சதியை முறியடித்துவிடுவார்கள்.
ரிஷப ராசியினர் ஒருசிலருக்கு புதிய வீடு வாங்கும் யோகமும் புதிய நிலம் வாங்கும் யோகமும் உண்டாகும். ஒருசிலர் தற்போதுள்ள வீட்டை காலிசெய்துவிட்டு வசதியான வீட்டிற்குச் செல்வார்கள். உறவினர்கள் வருகை அதிகரிக்கும். அவர்களால் நன்மையும் கிடைக்கும். 16-12-2014-ல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 7-ல் வருகிறார். அது கண்டச் சனி எனப்படும்.
எனவே வாகனங்களில் கவனமாகச் செல்லவேண்டும். புதிய கடன் வாங்கி எந்தக் காரியத்தையும் செய்யக்கூடாது. (ரிஷபம் லக்னமாக அமைந்த ரிஷப ராசி அன்பர்கள், இந்த சனிக்காலத்தில் ஒரு சொத்து வாங்கி அதிக விலைக்கு விற்கக்கூடும்.) பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றத்தைக் காணலாம். ஒருசிலருக்கு வேலையில் இடமாற்றம் வரும். ஒருசிலருக்கு இலாகா மாற்றம் வரும். எனவே ரிஷப லக்னம் உள்ளவர்கள் தவிர, மற்ற ரிஷப ராசி அன்பர்கள் கூடுதல் கவனத்துடன், நிதானத்துடன் குடும்பத்தைப் பேணவேண்டும். சொந்தக் காரியங்களில் மட்டுமே ஈடுபடவேண்டும்.
ஆண்டின் முற்பகுதியில்- அதாவது 20-6-2014 வரை ராகு பகவான் உங்களுக்கு நன்மைகளைச் செய்வார். அதன்பின்னர் 21-6-2014 முதல் ராகு செய்த நன்மைகளை கேது பகவான் ஏற்றுச் செய்வார். ராகு உங்கள் ராசிக்கு 5-ல் வருவதால், குடும்பத்தில் ஒற்றுமையில்லாத நிலை ஏற்படக்கூடும். எதிலும் நிதானத்துடன் செயல்படுபவர்கள் வெற்றிக்கனியைப் பறிப்பார்கள். உடன்பிறந்தவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
உங்களின் உத்யோக ஸ்தானாதிபதியான சனிபகவான் டிசம்பர் 16 முதல் 7ல் அமர்வதால் அவ்வப்போது இடமாற்றம் வருமோ என்ற ஒரு அச்சம் இருக்கும்.
அப்படி வந்தாலும் கூட நன்மையில்தான் முடியும். மேலும், உங்களுக்கு வேண்டாதவர்கள் பழைய விஷயங்களை கிளறி உங்கள் மீது வழக்கு தொடர்வார்கள். ஒன்றும் பயப்படாதீர்கள். அரசு உத்யோகத்தில் இருப்பவர் களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வெல்லாம் கிடைத்து விடும்.
13-6-2014 முதல் 2-12-2014 வரையிலும், உங்கள் உடன்பிறந்தவர்களுக்காக பொருளாதார உதவி செய்தால் அதனால் உங்களுக்கு புதிய கடன் வந்துசேரும். விவசாயத்தில் தோட்டக் காய், கனி வகை, மலர் வகைகள் பயிரிட்டு நல்ல லாபத்தை அடையலாம்.
3-12-2014 முதல் 21-12-2014 வரையில் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் ஏமாற்றம் உண்டாகும். மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். கிணறு, போர்வெல் போடுபவர்கள் யோசித்து செயல்படவும்; நஷ்டம் வர வாய்ப்புள்ளது.
22-12-2014 முதல் 13-6-2015 வரை பொருட்கள் களவுபோக வாய்ப்புள்ளதால், கைப்பொருட்களை மிகவும் பத்திரமாக வைத்திருக்கவேண்டும். அதிக அளவில் செலவு செய்து வழக்கில் வெற்றிபெற நேரும்.
பெண்கள்
இந்த ஸ்ரீஜய வருடத்தில், குடும்பத்தில் வசதி அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே நிலவிய கருத்து வேறுபாடு நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வார்கள். பெண்களுக்கு பல ஆண்டுகளாகத் தடைப்பட்டுவந்த திருமணம் இனிதே நிறைவேறும். நல்ல வரனாக அமையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். நீண்டகாலமாகப் பிரிந்துவாழும் தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். காதல்வசப்பட்ட பெண்கள் தங்கள் பெற்றோர் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து, காதலைக் கைவிடுவார்கள்.
மாணவர்கள்
மாணவர்கள் இந்த ஆண்டு தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். பெற்றோரும் ஆசிரியரும் கல்வி நிறுவனமும் பாராட்டும் வகையில் கல்வியில் உயர்வார்கள். அதேபோல விளையாட்டுப் போட்டியிலும் சாதனை படைப்பார்கள். அதேசமயம் 13-6-2014 முதல் கல்வியாண்டு முடியும் வரை அதிகமான சிரத்தை எடுத்துப் படித்து முன்னேற வேண்டும். கல்வியில் தடை வராது. உயர்கல்வி மாணவர்கள் அரியர்ஸ் இல்லாமல் தேர்ச்சி பெறுவார்கள். சிலர் கேம்பஸ் செலக்ஷனில் தேர்வுபெறுவார்கள். ஒருசில மாணவர்களின் அலட்சியப் போக்கால் அதிக மதிப்பெண் கிடைக்காது. ஆனாலும் தோல்வியைத் தழுவ மாட்டார்கள்.
தொழிலதிபர்கள்- வியாபாரிகள்
தொழிலதிபர்கள் உற்பத்தியைப் பெருக்கி, ஆதாயத்தை அதிகரிக்கச் செய்வார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு நல்லமுறையில் கிடைக்கும். ஒருசிலர் தொழில்ரீதியாக அடிக்கடி வெளியூர், வெளிநாடு சென்று வருவார்கள். வியாபாரிகள் புதிய முறைகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுப்பார்கள். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
விவசாயிகள்
விவசாயிகள் புதிய சொத்துகளை வாங்குவார்கள். எதிலும் முன்னேற்ற கரமான பலனைக் காணலாம். சொத்துப் பிரச்சினைகளில் ஏற்பட்ட வழக்கு விவகாரம் சாதகமாக இருக்கும். ஒருசிலருக்கு கைவிட்டுப்போன சொத்துகள் மீண்டும் கிடைக்கும். மாற்றுப் பயிர்கள் சாகுபடி செய்வதன்மூலம் வருமானம் கிடைக்கும், கால்நடை வளர்ப்பவர்களும் ஓரளவு லாபம் பெறுவார்கள்.
அரசுப் பணியாளர்கள்
அரசு ஊழியர்களைப் பொறுத்தமட்டில் இந்த ஆண்டு 12-6-2014 வரை சாதகமாக அமையும். 13-6-2014-க்குமேல், நீங்கள் யாரை முழுமையாக நம்புகின்றீர்களோ அவர்களே உங்களுக்கு எதிராக செயல்படக்கூடும். கவனம் தேவை. ஜூலை 16 முதல் செப்டம்பர் இறுதி வரையிலும் செவ்வாய் பகவான் உங்களுக்கு சாதகமாக உள்ளார். இந்த காலகட்டத்தில் அரசு ஊழியர்கள் அதிகமாக லாபத்தை அடைவார்கள். ஒருசிலருக்கு விரும்பிய இடத்துக்கு மாறுதல் வரும். கையூட்டு பெறும் அரசு ஊழியர்கள் தண்டனைக்கு உள்ளாகும் நேரமிது. எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.
கலைத்துறையினர்
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் ஏற்படும். ஒருசிலர் படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்வார்கள். கலைஞர்களில் ஒருசிலருக்கு புகழும் பாராட்டும் வந்துசேரும்.
அரசியல் பிரமுகர்கள்
13-6-2014 வரை குரு பகவான் 2-ல் சாதகமாக உள்ளார். எனவே நீங்கள் எதிர்பார்த்தபடி தேர்தல் வெற்றியைக் காண்பீர்கள். நீங்கள் எந்தப் பக்கம் ஆதரவு தருகிறீர்களோ, அதன்படி வெற்றியைக் காண் பீர்கள். அதன்பிறகு அரசியலில் சற்று யோசித்துச் செயல்பட வேண்டும். தலைமையால் விமர்சிக்கப்படலாம். 13-6-2014 வரை தேர்தல் களம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. எனவே நீங்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த காலகட்டத்தில் ஒருசில எம்.எல்.ஏக்கள் அமைச்சராகவும் பொறுப்பேற்கும் வாய்ப்பு வரும். ஒருசிலருக்கு முக்கியத்துவம்வாய்ந்த இலாகா பொறுப்புகள் வந்துசேரும்.
75% நன்மை
இந்த ஸ்ரீஜய வருடத்தில் ரிஷப ராசி அன்பர்கள் 75 சதவிகித நன்மை பெறவுள்ளார்கள். இந்த ஆண்டு உங்களுக்கு 11 பங்கு லாபம்; 2 பங்கு மட்டுமே விரயம். ஆரோக்கியம் 2 பங்கு, அவஆரோக்கியம் 5 பங்கு (எனவே உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை), ராஜபூஜிதம் 8 பங்கு, ராஜயோகம் 3 பங்கு, சுகம் 3 பங்கு அமைகிறது. (கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கான பலன், மேஷ ராசிபலனின் இறுதியில் உள்ளது.)
ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை மாதம்முதல் ஆடி மாதம்வரை ஐந்து பங்கு லாபம். எனவே சௌபாக்கியத்துடன், எதிர்காலத்திற்கு வேண்டிய சேமிப்புகளையும் உருவாக்கிக் கொள்வீர்கள்.
ஆவணி முதல் கார்த்திகை வரையில் இரண்டு பங்கு லாபம் வருகின்றது. சேமிப்புத் தொகை இப்போது உங்களுக்குப் பயன்படும்.
மார்கழி முதல் பங்குனி வரை மூன்று பங்கு லாபம் வருகின்றது. குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆலய வழிபாடுகள் சிறக்கும். தாய்- தந்தையர் வழியில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.
மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை வருமானக் குறைவு உள்ளது. வரவைவிட செலவுகள் கூடுதலாக இருக்கும்.
ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானத்தை சீராக செலவு செய்யவேண்டும். கூடுதல் செலவுகளுக்காக புதிய கடன்கள் ஏற்படலாம்.
மார்கழி முதல் பங்குனி வரை ஓரளவு வருமானம் வரும். செலவுகள் கட்டுக்கடங்கி காணப்படும். சிக்கனம், புதிய கடன் ஏற்படுவதைத் தடுக்கும்.
ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிடப் பரிகாரம்
ஆண்டு முழுவதும் வருகின்ற ஏகாதசி திதிகளில் பெருமாள் ஆலயம் சென்று, நெய்விளக்கேற்றி 11 முறை வலம் வந்தால் நல்ல பலன்களை அடையலாம். முடியாதவர்கள் பசுக்களுக்கு வைக்கோல், அகத்திக்கீரை, வாழைப்பழம் தானம் செய்யலாம். அதுவும் முடியாதவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பசுவுக்கு மஞ்சள், குங்குமம் தடவி வாலைத் தொட்டு வணங்கினால் நன்மையுண்டு. ஆண்டு முழுவதும் பெருமாள் உங்களுக்குத் துணையிருப்பார்.