Thursday, December 26, 2013

2014 புத்தாண்டு பலன்-மீனம்

மீனம்
Monthly Astrology with horoscope prediction for Meena Rasi

உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பழைய கசப்பான அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொண்டிருப்பீர்கள். புதிய அனுபவங்களை சுமந்து கொண்டு இனி பயணிப்பீர்கள். சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். பெரிய நிறுவனம் உங்களை நல்ல சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்யும். வீடு, வாகனம் உங்கள் ரசனைக்கேற்ப அமையும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.
சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 10ம் வீட்டிலேயே சூரியனும், புதனும் நிற்கும்போது பிறப்பதால் உங்களின் நிர்வாகத் திறன் கூடும். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பணவரவு உண்டு. போட்டித் தேர்வுகளில் வெற்றிப் பெற்று புது வேலையில் சேர்வீர்கள். வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வரும். அரசாங்க விஷயங்கள் எளிதாக முடியும். வெளிநாட்டிற்குச் செல்ல விசா கிடைக்கும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை எடுத்து நடத்துவீர்கள். பேசாமல் இருந்த நண்பர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள்.
12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் நிற்பதால் அலுவலகச் சூழல் கொஞ்சம் இறுக்கமாகத்தான் இருக்கும். எப்போதும் பதட்ட த்துடன் காணப்படுவீர்கள். தாயாரின் ஆரோக்யம் கொஞ்சம் பாதித்து பின்னர் சரியாகும். தாயாருக்கு மூச்சுப் பிடிப்பு, மூட்டு வலி வந்து நீங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வீட்டை கூடுதல் செலவு செய்து சீர் செய்ய வேண்டி வரும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்குவீர்கள்.
ஆனால், 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 5ம் வீட்டிலேயே அமர்வதால் மனதில் நிம்மதி பிறக்கும். இதுவரை வீட்டில் தடைபட்டுக் கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். புதியதாக வீட்டு மனை வாங்குவீர்கள். வருமானத்தை உயர்த்த பல்வேறு விதங்களில் யோசிப்பீர்கள். வெகுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மழலை பாக்யம் கிட்டும். பிள்ளைகள் சொல்பேச்சு கேட்டு நடப்பார்கள். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். மகனுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல பெண் அமைவார்.