Monday, December 2, 2013

உலக வலம்

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரேனில் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள மக்கள் புரட்சி.

உக்ரேன் தலைநகர் கியெவ்வில் அரச கட்டிடங்களை முற்றுகையிட்டு சூறையாடி வரும் பொதுமக்கள், அங்குள்ள சுதந்திர சதுக்கத்தையும், நகர மையத்தையும் ஆக்கிரமித்துள்ளனர்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டும் அவற்றுடன் நட்புறவை வளர்க்கும் நோக்குடனும் ஐரோப்பிய ஒன்றியம் ஓர் மாநாட்டை லிதுவேனியாவில் கடந்த வாரம் நடத்தியது.

இதன் படி எதிர்வரும் 2014ம் ஆண்டிலிருந்து உக்ரேன் உள்ளிட்ட ஆறு கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்துடன் அங்கத்துவமற்ற நட்பு நாடுகளாக வர்த்தக தொடர்பை மேற்கொள்ளும் சூழ்நிலை தோன்றவுள்ளது.

எனினும் இந்த ஒப்பந்தத்தில் உக்ரேன் கையெழுத்திடுவதற்கு இறுதிநேரத்தில் மறுப்பு தெரிவித்துவிட்டது. இது உக்ரேன் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் உக்ரேன் கையெழுத்திட்டால், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மலிவான விலையில் எரிவாயு கிடைக்கும். ஆனால் அதே போன்று ஐரோப்பிய ஒன்றிய உற்பத்திகளுக்கான பாரிய சந்தை வாய்ப்பு உக்ரேனுக்கு கிடைக்கும். அதோடு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள், விசா கட்டுப்பாடுகள் என்பனவும் தளர்த்தப்பட்டு உக்ரேன் மக்கள் சுதந்திரமாக ஐரோப்பிய நாடுகளுக்கு வந்து செல்லும் வாய்ப்பு உருவாகும்.
இதனால் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது நிச்சயம் தமக்கு பயனுடையதாக இருக்கும் என பொதுமக்கள் கருதுகின்றனர். ஏற்கனவே உக்ரேனில் ஜனநாயக பண்புக்குறைவு, பழைய சர்வாதிகாரப் போக்குகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருத்தல் போன்ற காரணங்களால் உக்ரேன் மக்களிடையே அரசு மீது கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் இந்த ஒப்பந்ததில் கையெழுத்திட உக்ரேன் அரசு மறுப்பு தெரிவித்திருப்பது அவர்களுக்கு மேலும் கோபத்தை கிளறியுள்ளதுடன், இதனாலேயே இத்திடீர் மக்கள் புரட்சி வெடித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மாறாக உக்ரேன் பிரதமர் விக்டர் யனுகோவிச் தாம் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பதற்கான காரணங்களை இவ்வாறு கூறுகிறார். ரஷ்யாவின் நட்பு நாடுகள் மேலை நாடுகளின் பக்கம் சாய்வதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுத்துவிடும். இதனால் ரஷ்யாவுடனான எமது நல்லுறவை தியாகம் செய்துவிட முடியாது. அதோடு, இந்த ஒப்பந்தம் உக்ரேனின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு போதுமான நிதியுதவியை செய்வதாக இல்லை என்கிறார் அவர்.

இந்நிலையிலேயே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் அங்கு தீவிரமடைந்துள்ளது. தலைநகரில் அமைந்துள்ள அரச காலியங்கள் முற்றாக புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதால் அரச ஊழியர்கள் தத்தமது பணிகளை செய்யமுடியாது திணறுகின்றனர். சுதந்திர சதுக்கத்தில் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்றும் கூடி பல்வேறு சுதந்திர ஸ்லோகங்களுடன் முழக்கமிட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர், இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். சில எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்துள்ள போதும், சில எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தை எதிர்த்துள்ளன. வெறுமனே ஜனநாயக பண்புகளிலிருந்து விலகி, கோபத்தை மேலும் தூண்டக் கூடிய பயனற்ற செயலிது என அவை கூறியுள்ளன.

இந்நிலையில் அமைதியான முறையில் யாரும் தமது எண்ணங்களை வெளிப்படுத்த உரிமையுண்டு என உக்ரேன்  அரச நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.